மஹியங்கனையில் கோரம்; ஸ்தலத்தில் பலி

மட்டக்களப்பைச் ​சேர்ந்த இரண்டு குடும்பங்களுக்கு நேர்ந்த பரிதாபம்

லக்ஷ்மி பரசுராமன், வெல்லாவெளி தினகரன், புதிய காத்தான்குடி தினகரன், மட்டக்களப்பு குறூப், கல்லடி குறூப் நிருபர்கள்

மஹியங்கனையில் நேற்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் மட்டக்களப்பு நகரைச் சேர்ந்த பத்துப்பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களுள் மூன்று சிறுவர்களும் அடங்குவர். இந்த விபத்தில் காயமடைந்த இரண்டு பெண்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று அதிகாலை 1.30 மணியளவில் மஹியங்கனை- பதுளை பிரதான வீதியிலுள்ள மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு முன்பாக இவ்விபத்து இடம்பெற்றது. திருகோணமலையில்

 

இருந்து தியத்தலாவை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸூடன் பதுளையூடாக மட்டக்களப்பு நோக்கி பயணித்த வான் நேருக்கு நேர் மோதியதிலேயே இவ்விபத்து நேர்ந்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

சம்பவத்தின்போது வானில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் இருந்துள்ளனர். இதில் 10 பேர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர். காயமடைந்த ஏனைய இருவரும் மஹியங்கனை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்துள்ள மூன்று சிறுவர்களுள் இருவர் இரட்டைக் குழந்தைகளாவர். மேலும் மூன்று பெண்களும் நான்கு ஆண்களுமே இந்த விபத்தில் உயிரிழந்திருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். ஜோசப் ரெலிண்டன் ஜோசப் (கணவர்-வயது 56), சில்வியா ஜோப்ஸ் (மனைவி வயது 50), லிஸ்டர் அலெக்சாந்தர்( சாரதி வயது 32), நிசாலின் அலெக்சாந்தர் (சாரதியின் மனைவி வயது 27), ஹனாலி அலெக்சாந்தர் (சாரதியின் மகன் வயது 04), பைய்கா அலெக்சாந்தர் (சாரதியின் மகன் வயது 04), ஜூட் பிரான்ஸ் ஹென்றிக் (கணவர்- வயது-48), மரியா பான்சியா ஹென்றிக் (ஜூட்டின் மனைவி வயது 42), செரப் ஹென்றிக் (ஜூட்டின் மகள் வயது-10),ஜூட் பிரான்ஸ் ஹெயிட் ஹென்றிக் (ஜூட்டின் மகன் வயது 19) ஆகியோரே விபத்தில் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். இவர்கள் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த கணவன், மனைவி, பிள்ளைகள் என்றும் அனைவரும் மட்டக்களப்பு ரத்னம் வீதி, டச்பார் வீதி மற்றும் பனிச்சையடியைச் சேர்ந்தவர்களென்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை இவ்விபத்தில் செகானி ஹென்றிக் (ஜூட்டின் மகள் வயது 13),மற்றும் ஜா- எல பிரதேசத்தைச் சேர்ந்த ரெஷானி பேர்கஷால் (16) ஆகிய இருவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் பதுளை வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக மஹியங்கனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. வான் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கம் காரணமாகவே அவர் தனக்குரிய பாதையை விட்டு விலகி எதிரே வந்த தனியார் பஸ்ஸூடன் மோதியிருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

விபத்துக்குள்ளான வான் முற்றாக சேதமடைந்துள்ளது. ஓமானில் கடந்த 20 வருடங்களாக பணியாற்றி வந்த ரெலின்டன் யொப்ஸ் கடந்த 13 ஆம் திகதி சனிக்கிழமை நாடு திரும்பியிருந்தார். அவரை அழைத்துச் செல்வதற்காக மட்டக்களப்பிலிருந்து மேற்படி நபர்கள் கொழும்பு வந்திருந்தனர். கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேரில் சென்று அவரை அழைத்தவர்கள் உடனடியாக ஊருக்கு திரும்பாமல் தெஹிவளையிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்துள்ளனர். பின்னர் கொழும்பிலிருந்து கண்டிக்கு சுற்றுலா சென்று அங்கு உல்லாசமாக இருந்து விட்டு பதுளை வீதிக்குடாக மட்டக்களப்பு நோக்கிச் செல்கையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்துக்குள்ளான பஸ் பெரும் சேதங்களுக்கு உள்ளாகாததுடன் பஸ்ஸில் பயணித்தவர்களும் தெய்வாதீனமாக உயிர் பிழைத்துள்ளனர். மூவர் மட்டும் சிறு காயங்களுடன் மஹியங்கனை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸார் தனியார் பஸ் சாரதியை கைது செய்து மஹியங்கனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதவான் பஸ் சாரதியை 02 இலட்சம் ரூபா வீதம் இரண்டு சரீரப் பிணையில் செல்ல அனுமதித்துள்ளார். இவ்விபத்து தொடர்பிலான அடுத்த வழக்கு 2019 செப்டம்பர் 05 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளது.

Thu, 04/18/2019 - 06:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை