லிபிய தலைநகரில் போர் நீடிப்பு: ஷெல் வீச்சில் நான்கு பேர் பலி

லிபிய தலைநகர் திரிபோலியில் இடம்பெற்ற உக்கிர ஷெல் வீச்சில் நான்கு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

நாட்டின் கிழக்கு பகுதியை தளமாகக் கொண்ட கலீபா ஹப்தரின் படை தலைநகர் மீது தாக்குதல் தொடுத்து இரண்டு வாரங்களை எட்டும் நிலையில் அங்கு தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. திரிபோலியின் தெற்கு புறநகர் பகுதியில் ஐ.நா அங்கீகாரம் அளித்த திரிபோலி அரசுக்கு ஆதரவான படையினர் நகரை தக்கவைக்க கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் பயன்படுத்தப்படாத விமானநிலையத்திற்கு அருகில் தெற்கு குடியிருப்பு மாவட்டமான அபூ சலிமில் கடந்த செவ்வாய்கிழமை நள்ளிரவு அளவில் ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இதில் குறைந்தது நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் 4ஆம் திகதி தொடக்கம் நீடித்து வரும் இந்த மோதல்களில் குறைந்தது 174 பேர் கொல்லப்பட்டு மேலும் 756 பேர் காயமடைந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு நேட்டோ ஆதரவில் கடாபி ஆட்சி கவிழ்க்கப்பட்டது தொடக்கம் லிபியாவில் அரசியல் பதற்றம் மற்றும் வன்முறைகள் நீடித்து வருகிறது.

2016 மார்ச் மாதம் தலைநகர் திரிபோலியை அடைந்த பயாஸ் அல் சர்ராஜ் தேசிய உடன்படிக்கைக்கு அமைய அரசொன்றை அமைத்தபோதும் கிழக்கு நகரான தொப்ரூக்கை தளமாகக் கொண்ட ஹப்தர் கூட்டணி அதனை நிராகரித்தது.

இந்நிலையில் ஹப்தர் தலை நகரை நோக்கி முன்னேற முயற்சிப்பது நாட்டில் மேலும் ஸ்திரமற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது.

Thu, 04/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை