மனிதாபிமான நெருக்கடி தொடர்பில் ஐ.நா கவலை

லிபிய தலைநகர் திரிபோலியை கைப்பற்ற நீடிக்கும் உக்கிர மோதல்களில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி இருக்கும் நிலையில் மனிதாபிமான நிலைமை மேலும் மோசமடைந்து வருவதாக ஐ.நா எச்சரித்துள்ளது.

“இதே உக்கிரத்துடன் நிலைமை நீடித்தால் தொடர்ந்து அழிவுகளை எதிர்பார்க்கலாம்” என்று லிபியாவுக்கான ஐ.நா மனித உரிமை இணைப்பாளர் மரியா டு வல்லா ரிமைரோ எச்சரித்துள்ளார்.

லிபிய தலைநகரில் உள்ள சர்வதேச அங்கீகாரத் பெற்ற அரசுக்கு எதிராக முன்னாள் இராணுவ ஜெனரல் கலீபா ஹப்தரின் லிபிய தேசிய இராணுவம் கடந்த ஏப்ரல் 4 ஆம் திகதி தாக்குதலை ஆரம்பித்தது.

“வான் பலத்தை பயன்படுத்தும்போது, மக்கள் செறிந்து வாழும் பகுதிகள் மீது கண்மூடித்தனமாக செல் வீச்சு நடத்தப்படுகிறது. அங்கு நம்பிக்கையுடன் இருப்பது மிகக் கடினம்” என்று ரிமைரோ குறிப்பிட்டுள்ளது.

ஹப்தர் படை கடந்த சனிக்கிழமை நடத்திய வான் தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டு மேலும் 20 பேர் காயமடைந்தனர்.

“பொதுமக்களை மதிக்கும்படியும், மனிதாபிமான யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தும்படியும் நாம் தொடர்ந்து அழைப்பு விடுப்பதோடு பிரச்சினைக்கு அமைதியான தீர்வொன்று கிடைக்கும் என்று நாம் தொடர்ந்து நம்புகிறோம்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

திரிபோலியில் நீடிக்கும் மோதலில் இதுவரை குறைந்தது 278 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு 1,300 பேர் வரை காயமடைந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

திபோலியில் மோதல் நீடிக்கும் பகுதிகளில் இருந்து 41,000 பேர் வெளியேறியுள்ளனர். மோதலுக்கு இடையில் சிக்கியிருக்கும் பலருக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுகிறது.

Tue, 04/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை