பள்ளிவாசல் துப்பாக்கிதாரி மீது 50 கொலை குற்றச்சாட்டு பதிவு

நியூசிலாந்தின் கிரைஸ்சர்ச் பள்ளிவாசல்களில் 50 பேரை சுட்டுக் கொன்று தம்மை வெள்ளை மேலாதிக்கவாதியென அறிவித்துக் கொண்ட பிரன்டன் டெரன்ட் மீது 50 கொலை மற்றும் 39 கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவர் இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

28 வயது அவுஸ்திரேலிய நாட்டவரான அந்த துப்பாக்கிதாரி மார்ச் 15 ஆம் திகதி துப்பாக்கிச் சூடு இடம்பெற்று அடுத்த தினத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது ஒரு கொலைக் குற்றச்சாட்டு மாத்திரமே பதிவு செய்யப்பட்டிருந்தது.

நேற்று அவர் மீது மேலதிக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவர் குற்றங்காணப்பட்டால், நிறுசிலாந்தில் பிணையின்றி வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் முதல் நபராக மாற வாய்ப்பு உள்ளது. ஒக்லாந்து சிறையில் இருந்து வீடியோ மூலம் இன்று கிரைட்சேர்ச் உயர் நீதிமன்றத்தில் தோன்றவிருக்கும் டெரன்ட், தமக்காக தாமே வாதிடவுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகளுடன் வேறு குற்றச்சாட்டுகள் குறித்தும் ஆலோசித்துவருவதாக, நியூசிலந்துக் பொலிஸ் அதிகாரிகள் கூறினர்.

இதன்போது தமது வாக்குமூலத்தை அளிக்க அவருக்கு அனுமதி அளிக்கப்படவுள்ளது. மேலும் குறுகிய நேர வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட வாய்ப்பு உள்ளது.

கிரைஸ்சர்ச் நகரில் உள்ள அல்நூர் பள்ளிவாசல் மற்றும் லின்வுடன் பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் கடந்த மாதம் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கிதாரி கண்மூடித்தனமாக சூடு நடத்தி இருந்தார். இதில் 50 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

கடந்த முறை நீதிமன்றத்தில் ஆஜரானபோது தான் ஒரு வெள்ளையின மேலாதிக்கவாதி என கைகளால் அடையாளம் காட்டிக்கொண்டார். தற்போது நடைபெற்ற விசாரணை குறித்த மேலதிக தகவல்களை பொலிஸார் தெரிவிக்கவில்லை.

இந்தத் தாக்குதலையடுத்து, இஸ்லாத்துக்கு எதிரான வெறுப்புணர்வு, துப்பாக்கி உரிமச் சட்டங்கள், சமூக ஊடகங்களின் பங்கு ஆகியவை அதிக கவனத்தை ஈர்த்தன.

நியூசிலந்து பாராளுமன்றத்தில் துப்பாக்கி உரிமம் தொடர்பான புதிய சட்டமூலம் முதல் வாசிப்புக்குக் கொண்டுவரப்பட்டது.

படுகொலைச் சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரிக்க ஆணைக்குழுவும் அமைக்கப்பட்டது.

Fri, 04/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை