3,66,000 விபத்துக்கள்

9 ஆண்டுகளில் 25,607 பேர் பலி

வீதிப் பொறியியல் தவறுகளும் திருத்தப்படாமை முக்கிய காரணம்

இலங்கையில் 2007 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 3 இலட்சத்து 65 ஆயிரத்து 925 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வீதி விபத்துக்கள் காரணமாக 25 ஆயிரத்து 607 பேர் பலியாகியுள்ளனர்.

இதேநேரம், அதிக வீதி விபத்துக்களுக்கு மோட்டார் சைக்கிள்களே காரணமாகும். அதனையடுத்து முச்சக்கர வண்டிகள், லொறிகள், தனியார் பஸ்கள், வான்கள் மற்றும் கார்கள் ஆகியவை வரிசைக் கிரமமாக விபத்துக்களுக்கு காரணமாவதாக கணக்காளர் நாயகத்தின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

‘இலங்கையில் வீதிப் பாதுகாப்பு தொடர்பான அரச தரப்பினரின் செயற்பாடுகள்’ என்ற கணக்காளர் நாயகத்தின் அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. வீதிப் பொறியியல் தொடர்பான தவறுகள் திருத்தப்படாமையே வீதி விபத்துக்களுக்கு பிரதான காரணம் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள பொலிஸ் பிரிவுகளிலிருந்து கிடைத்த தகவல்களை பகுப்பாய்வு செய்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையின்படி, பஸ் தரிப்பிடங்களுக்கு அருகில் பாதசாரிகள் கடவைகள் அமைக்கப்பட்டுள்ளமை, பாதசாரிகள் கடவைகள் சரியாக இனங்காட்டப்படாமை, சில இடங்களில் பாதசாரி கடவைகள் புதிதாக வர்ணம் பூசப்படாமை, வீதிகளுக்கு இடையூறு செய்யும் வகையில் மின்சார மற்றும் தொலைபேசி தூண்கள் இருத்தல், வீதிகளுக்கு போதிய வெளிச்சம் இல்லாமை, வீதி விளக்குகள் முறையாக செயற்படாமை ஆகியவையே குறிப்பிடத்தக்க அளவு வீதி விபத்துக்களை

ஏற்படுத்தியுள்ளதாக இந்த அறிக்கையில கூறப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு 293 இடங்களில் இடம்பெற்ற 368 வீதி விபத்துக்களில் பஸ் நிறுத்தங்களுக்கு அருகில் பாதசாரி கடவைகள் அமைக்கப்பட்டிருந்ததே காரணமாகும் என்று அந்த அறிக்கை கூறுகிறது. இதில் 355 இடங்களில் பாதசாரி கடவைகள் சரியாக அடையாளப்படுத்தப்படவில்லை.

அதேநேரம் 109 இடங்களில் வீதிகளை இடையூறு செய்யும் வகையில் மின்சார மற்றும் தொலைபேசி தூண்கள் அமைந்திருந்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 108 இடங்களில் இரவு நேரங்களில வீதிவிளக்குகள் எரியாமல் இருந்தமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேநேரம் மதகுகள் மற்றும் பாலங்களைக் குறிக்கும் எச்சரிக்கை பலகைகள் இல்லாமையும் வீதி விபத்துக்களுக்கு ஒரு காரணமாகும். குறிப்பாக 2015 ஆம் ஆண்டில் இவ்வாறான 76 விபத்துக்கள் இடம்பெற்றிருந்ததாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் நெடுஞ்சாலைகளின் நடுவில் சாலைத்திட்டுகள் இல்லாமையும் ஏற்கனவே இருந்துவரும் சாலைத்திட்டுக்கள் முறையாக வர்ணம் பூசப்படாமல் இருத்தலும் குறிப்பிட்ட காபட் பகுதியில் 74 வீதி விபத்துக்களை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

சில வீதிகளில் உள்ள அடையாளம் காட்டும் பலகைகள் இரு பக்கங்களுக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டிருக்கும் ஆனால் அண்மைக் காலத்தில் இவை ஒரு பக்க வீதிப் போக்குவரத்துக்கு ஏற்றவகையில் மாற்றப்பட்டன. எனினும் அவை மாற்றப்படாமல் முன்பிருந்ததைப் போல் அமைந்திருப்பதால் மோட்டார் வாகன சாரதிகளுக்கு குழப்பம் ஏற்படுவதை இந்த அறிக்கை அவதானித்துள்ளது. அதேநேரம் வீதிகள் குண்டும் குழியுமாக இருத்தல், வீதியின் இரு புறங்களிலும் நேருக்கு நேரே பஸ் நிறுத்துமிடங்கள் இடம்பெறுதல், சட்டவிரோத நிர்மாணங்கள், போக்குவரத்து கட்டுப்பாட்டு அறிவிப்பு பலகைகள் இல்லமை குறிப்பிட்டுக் காட்டப்படாத இடங்களில் பஸ் நிறுத்தங்கள் அமைதல் ஆகியவையும் வீதி விபத்துக்கள் இடம்பெற காரணங்களாகும் என்று அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது.

ஒரு சில வீதிகளில் நீண்ட காலமாக திருத்த வேலைகள் இடம்பெறுவதால் வீதியில் அகழப்படும் மண் மேடாக குவிக்கப்பட்டிருப்பதும் உருளைக் கற்கள் மற்றும் சிறு கற்கள் வீதிகளிலேயே விடப்படுவதும் விபத்துக்கு காரணமாகின்றன.

அதேவேளை இலங்கையின் வாகனப் பதிவுகளின் அதிகரிப்புக்கு ஏற்ப வீதி வலையமைப்பு அபிவிருத்தி செய்யப்படவில்லை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2010 இல் 3.9 மில்லியனாக இருந்த வாகனப் பகுதிவுகள் 2017இல் 7.2 மில்லியனாக அதிகரித்துள்ள நிலையில் 2010 இல் 12 ஆயிரத்து 19 கிலோ மீட்டராக இருந்த வீதி வலையமைப்பு 2017 இல் 12 ஆயிரத்து 220 கிலோ மீட்டர் என்ற அளவுக்கே அதிகரித்துள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. வீதிகளில் பாதுகாப்பை மேற்கொள்ளுதல் ஆகியவற்றுக்கு கணக்காய்வு மிகவும் அவசியமாகும். ஆனால் இவ்வாறான கணக்காய்வு அறிக்கைகள் 2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் மேற்கொள்ளப்படவில்லை. வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பயிற்றப்பட்ட பொறியியலாளர்கள் இல்லாமையே காரணம் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

 

Fri, 04/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை