உடனடி நடவடிக்கை எடுக்க எட்டு அரச நிறுவனங்களுக்கும் உத்தரவு

விசேட தேவையுடையோரின் அடிப்படை தேவைகள் மீறப்பட்டதாக உச்சமன்று தீர்ப்பு

விசேட தேவையுடையோரின் அடிப்படைத் தேவைகளை அரசு மீறியிருப்பதாக உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.

விசேட தேவையுடையோரின் அடிப்படை உரிமைகள் அரச கட்டிடங்கள், பொது இடங்கள் மற்றும் பொது சேவைகளுள்ள இடங்களில் நிராகரிக்கப்பட்டிருப்பதாக உச்ச நீதிமன்றம் நேற்று சுட்டிக்காட்டியுள்ளதன் மூலம் இது வரலாற்றில் முக்கிய தீர்ப்பாக அமைந்துள்ளது. இவர்களின் தேவைகள் குறித்து அரசியலமைப்பின் சரத்து 12(1) இல் குறிப்பிடப் பட்டுள்ளமை குறித்தும் நீதிமன்றம் எடுத்துரைத்துள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளான பிரசன்ன ஜயவர்தன, முர்து பெர்ணான்டோ, விஜித் கே.மலல்கொட ஆகியோரே நேற்று மேற்படி இவ்வரலாற்றுத் தீர்ப்பை வழங்கினர். மேலும் விசேட தேவையுடையோர் தொடர்பில் உடனடி நடவடிக்கை

எடுக்குமாறும் எட்டு அரசாங்க நிறுவனங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. விசேட தேவையுடையோரின் தேவைகள் குறித்த 'இதிரிய' அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரியான டொக்டர்.அஜித் சி.எஸ் பெரேரா தாக்கல் செய்திருந்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டபோதே உச்ச நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியது.

மேலும் மனுதாரரின் சட்ட நடவடிக்கைகளுக்கு ஏற்பட்ட செலவீனங்களை ஈடு செய்யும் வகையில் அவருக்கு 50 ஆயிரம் ரூபாவை வழங்குமாறும் உச்ச நீதிமன்றம் அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கமைய சமூக சேவைகள் மற்றும் சமூக நலன்புரி அமைச்சு, விசேட தேவையுடையோருக்கான தேசிய சபையின் தலைவர், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சு, வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சு, பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு, கல்வி அமைச்சு, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு, இலங்கை சுற்றுலா அபிவிருத்திச் சபை, நகர அபிவிருத்தி அதிகாரசபை, மற்றும் அமைச்சின் செயலாளர்கள் ஆகியோர் 2006 இல.1 ஒழுங்கு விதிகளுக்கமைய உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 

Fri, 04/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை