'ஹூமைஸரியன்' கிண்ணம்: 2007 க.பொ.த. சாதாரண தர அணி வசம்

இலங்கையின் முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றான பேருவளை சீனன் கோட்டை அல் -ஹூமைஸரா தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற 4 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிகட் சுற்றுப் போட்டியில் 2007 க.பொ.த. சாதாரண தர அணி 'ஹூமைஸரியன்' கிண்ணத்தை சுவீகரித்து சம்பியனானது.

சீனன் கோட்டை நளீம் ஹாஜியார் விளையாட்டரங்கில் கடந்த 7ம் திகதி மாலை இறுதிப் போட்டி பல்லாயிரக்கணக்கான பழைய மாணவர்கள், ரசிகர்களின் பங்குபற்றலுடன் இடம் பெற்றது.

1984ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான க.பொ.த. சாதாரண தரத்தில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் அடங்கிய 36 கிரிக்கெட் அணிகள் இச்சுற்றுப் போட்டியில் பங்குபற்றின. ஆறு நாட்களாக 63 போட்டிகள் இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இறுதிப் போட்டியில் 2007 அணியும் 1999அணியும் மோதின. 1999ம் ஆண்டு அணியை எதிர் கொண்ட 2007ம் ஆண்டு அணி 4 மேலதிக ஓட்டங்களினால் வெற்றியீட்டியது. 2007 அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 50 ஓட்டங்களைப் பெற்றதோடு 1999 அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 47 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

வீரர்கள் அறிமுக நிகழ்வின் பின்னர் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற 2007ம் ஆண்டு அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இந்த அணிக்கு உமர் அலி ஜெஸ்மின் தலைமை வகித்தார். 1999ம் ஆண்டு அணிக்கு தலைமை வகித்தவர் எம்.ஸப்ராஸ் இறுதிப் போட்டியில் சம்பியனாக 'ஹூமைஸராவின்' வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றும் நோக்கில் இரு அணிகளும் கடும் முயற்சியுடன் விளையாடிய போதிலும் 4 மேலதிக ஓட்டங்களினால் 2007 அணி வெற்றிவாகை சூடியது.

இறுதிப் போட்டியில் சிறந்த வீரராக 2007ம் ஆண்டு அணியைச் சேர்ந்த முஹம்மத் அப்ராஜ் தெரிவு செய்யப்பட்டார். சுற்றுப் போட்டியில் சிறந்த வீரராக 1999ம் ஆண்டு அணியைச் சேர்ந்த அஷ்கர் அலியும் சுற்றுப் போட்டியின் சிறந்த பந்து வீச்சாளராக 2007ம் ஆண்டு அணியைச் சேர்ந்த முஹம்மத் ஸப்ரதும் தெரிவு செய்யப்பட்டனர்.

அதிபர் எம்.ஆர்.எம். றிஸ்கி தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் களுத்துறை மாவட்டச் செயலாளர் யு.டி. சந்தன ஜயலால், சீனன் கோட்டை பள்ளிச் சங்க உப தலைவர் முஸ்தாக் ஜாபிர் மற்றும் பேருவளை பிரபல இரத்தினக்கல் வர்த்தகருமான எம்.இஸட்.எம் நிஸார், கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டனர்.

கிராஅத், தேவிய கீதம், பாடசாலைக் கீதத்தின் பின்னர் இடம் பெற்ற பரிசளிப்பு விழாவில் மாகாண சபை உறுப்பினர் இப்திகார் ஜெமீல், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.எம். அம்ஜாத், பிரதி அதிபர் எம்.லியாப் தீன், உப அதிபர் முஹம்மத் நளீம், விஸ்டம் சர்வதேச பாடசாலை தலைவர் அஷ் ஷெய்க் எம்.எச்.எம் பௌஸர் (நளீமி) ஈ.ஜி.எல் லெப் உரிமையாளர் ஹாரிஸ் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அல் -ஹூமைஸரா தேசிய பாடசாலைக்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.எம்.எம் அம்ஜாத் ஜிம் உடற்பயிற்சி உபகரண தொகுதியும், பழைய மாணவர் எம். ஆஷிக் கரீம் 1.50.000 ரூபா பெறுமதியான கிரிக்கெட் உபகரண தொகுதியையும் நிகழ்வின் போது அதிபர், பழைய மாணவர் சங்க செயலாளர் அரூஸ் அனஸ், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் எம்.ஏ.எம் பாரிஸ் ஆகியோரிடம் அன்பளிப்புச் செய்தனர். விளையாட்டுத் துறையில் தேசிய சர்வதேச மட்டத்தில் பல்வேறு சாதனைகளை நிலை நாட்டிய அல்- ஹூமைஸராவுக்கு விளையாட்டு உபகரணங்கள் கிடைக்கப்பெறுவது மாணவர்களின் திறமைகளை மேலும் வளர்த்துக் கொள்ள வாய்ப்பாக அமையும்.

பேருவளை விசேட நிருபர்

Wed, 04/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை