சமுர்த்திப் பயனாளிகளுக்குள்​ தோட்டத் தொழிலாளர்ளை உள்வாங்க வேண்டுகோள்

சம்பள அதிகரிப்புக் கோரி போராட்டம் நடத்திவரும் தோட்டத் தொழிலாளர்களை ஆறு இலட்சம் சமுர்த்தி பயனாளிகளுக்குள் உள்வாங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன்  நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது ஒரு இலட்சத்து 40 ஆயிரம் தோட்டத் தொழிலாளிகள் மட்டுமே இருக்கின்றபோதும் இது 15 இலட்சம் இந்திய வம்சாவளி மக்களுக்குரிய பிரச்சினையென்றும் அமைச்சர் நேற்று பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 02ஆம் வாசிப்புமீதான 05ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். அமைச்சர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது-

கூட்டு ஒப்பந்தத்துக்கு மேலதிகமாக தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளத்துடன் நாளொன்றுக்கு 50ரூபாவை வழங்க அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலை திட்டத்தை நாம் வர​வேற்கின்றோம்.

நுவரெலியா மாவட்டத்தில் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகின்றபோதும் தொழில்நுட்ப அதிகாரிகள் இல்லாமை பெரும் குறைபாடாகியுள்ளது. பல இடங்களில் சீரான வீதிகள் இல்லாமையினால் மக்கள் பாரிய சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அந்த வீதிகளை புனரமைக்க நுவரெலியா மாவட்டத்துக்ெகன தொழில்நுட்ப அதிகாரிகள் இல்லை. எனவே அவ்வாறான வெற்றிடங்கள்நிரப்பப்பட வேண்டும்.

பாடசாலை அபிவிருத்திக்காக இந்த அரசாங்கம் பாரிய வேலைத் திட்டங்களை முன்னெடுத்துள்ளது. அதற்காக நான் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்துக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

(லோரன்ஸ் செல்வநாயகம், லக்ஷ்மி பரசுராமன்)

Tue, 03/12/2019 - 10:38


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை