'மக்களின் இதயத் துடிப்பு எமக்கு நன்கு புரிகின்றது'

வெளிநாட்டுக் கடன்சுமை உள்ள போதிலும், பட்ஜட் மூலம் மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியும் பிரதமரும் ஒன்றுபட்டு பிரச்சினைகளை வென்றெடுக்க வேண்டும்

'மக்களின் இதயத் துடிப்பு எமக்கு நன்றாக விளங்குகின்றது' என்று கூறுகிறார் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான நவீன் திசாநாயக்கா.

கேள்வி: -சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் தொடர்பான உங்கள் மதிப்பீடு எவ்வாறானது?

பதில்: -உண்மையைச் சொல்லப் போனால் எமது நாட்டின் நிதி நிலைமை சிறந்த நிலையில் இல்லை. இந்த வருடத்தில்தான் வரலாற்றில் அதிக தொகையான கடன் தவணையினைச் செலுத்த வேண்டியுள்ளது. இந்தக் கடனைச் செலுத்தாவிட்டால் எமது நாடு சர்வதேச ரீதியில் தடுப்புப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டு விடும். அப்படி நடந்தால் எம்மால் மீண்டும் கடன்களைப் பெற முடியாது. இவ்வாறான நிலை இருக்கும் போது இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் மக்களுக்கு ஏராளமான நிவாரணங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அரசாங்க ஊழியர்களுக்கு மாதாந்தம் 2500 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. இராணுவத்தினரின் சம்பளங்கள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. அனைத்து தேர்தல் தொகுதிக்கும் கம்பெரலிய வேலைத் திட்டத்தின் கீழ் 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறைக்கு, கல்வித் துறைக்கு எந்த வித குறைப்புக்களும் இன்றி நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கேள்வி: -வரலாற்றில் அதிகமான கடன் தொகையை இவ்வருடத்தில் செலுத்த வேண்டியுள்ளதாக நீங்கள் கூறினீர்கள். அவ்வாறான நிலையில் பல நிவாரணங்களை வழங்குவதால் நாடு மென்மேலும் கடன் பொறியினுள் சிக்கிக் கொள்ளதா?

பதில்: இந்த மக்களுக்கான நிவாரணங்கள் நாம் ஏற்கனவே திட்டமிட்டவையாகும். முன்னைய வரவு செலவுத் திட்டங்களின் போது அமைச்சர் மங்கள நாட்டை ஐக்கியப்படுத்தும் வேலையைச் செய்தார். தற்போது அந்தச் செயற்பாடு முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. ஒரு பக்கத்தில் கடன்களைச் செலுத்திக் கொண்டிருக்கும் போது மறுபக்கத்தில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவது எமது கடமை. வாழ்க்கைச் செலவு உயர்ந்து செல்கின்றது என்பதை நாம் அறிவோம். நாம் மக்களோடு இருப்பவர்கள்.எனவே மக்களின் இதயத் துடிப்புக்கள் எமக்கு நன்கு கேட்கின்றது.

கேள்வி: -என்றாலும் தேர்தலை இலக்காகக் கொண்டு அரசாங்கம் மக்களுக்கு கனவு மாளிகை கட்டுவதாக எதிர்க்கட்சி குற்றம் சுமத்துகின்றதே...

பதில்: -நாமல் ராஜபக்ஷவின் டுவீட்டர் செய்தியைப் பாருங்கள். 'இவை அனைத்தும் நல்லவையே. எனினும் இவற்றைச் செய்ய முடியுமா!' என்றே அவர் கூறுகின்றார்.

கேள்வி: - ஐக்கிய தேசிய முன்னணிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. இவ்வாறான நிலையில் பாராளுமன்றத்தில் இந்த வரவு செலவுத் திட்டத்தை எவ்வாறு நிறைவேற்றப் போகின்றீர்கள்?

பதில்: -வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு நடக்கும் தினத்தில் இதனை உங்களால் கண்டு கொள்ள முடியும்.

கேள்வி: -ஜே. வி. பி தற்போது வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராகியுள்ளது. ஜே.வி.பியின் இந்த நிலைப்பாடு வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு எவ்வாறான தாக்கத்தைச் செலுத்தும்?

பதில்: - மக்கள் விடுதலை முன்னணி வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கும். அவ்வாறு நடக்கும் என்று நாம் முன்னரே நினைத்தோம். அவர்கள் அவர்களது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே செயற்படுவார்கள். எனினும் மக்கள் விடுதலை முன்னணி தற்போது ஜனநாயக ரீதியாக அரசியல் செய்கின்றது. 2018 ஒக்டோபர் சதிக்கு எதிராகவும் மக்கள் விடுதலை முன்னணி தெளிவான நிலைப்பாட்டில் இருந்தது. நாம் அதனைப் பாராட்டுகின்றோம்.

கேள்வி: - ஜனாதிபதியின் செலவு விடயத்தைத் தோற்கடிக்கப் போவதாக ஐ.தே.கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் கூறுகின்றனரே...?

பதில்: - அந்த பின்வரிசை உறுப்பினர்கள் சர்ச்சைக்குரிய கூற்றினைக் கூறியிருக்கின்றார்கள். நாம் அதனைப் புரிந்து கொள்ள வேண்டும். ஜனாதிபதி அமைச்சரவைக்கு நியமிக்கத் தகுதியானவர்களை நியமிக்காது உள்ளார் என்றும் குற்றச்சாட்டு எழுப்பப்படுகின்றது.

ஐக்கிய தேசிய கட்சிக்கு ஜனாதிபதியினால் கிடைக்க வேண்டிய கவனிப்பு கிடைப்பதில்லை என்ற நிலைப்பாடும் உள்ளது. எவ்வாறிருந்தாலும் நான் எந்நேரத்திலும் கூறுவது ஜனாதிபதியும், பிரதமரும் ஒன்றுபட்டு இந்தப் பிரச்சினையை வெற்றி கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றேயாகும். ஜனாதிபதியின் செலவு விடயங்களுக்கு எதிராக எந்த உறுப்பினராவது வாக்களித்தால் அதனால் நாடு ஸ்திரமற்ற நிலைக்கு  உள்ளாகிவிடும.

கேள்வி: - ஐக்கிய தேசிய கட்சி என்ற வகையில் ஜனாதிபதியின் செலவு விடயத்திற்கு எதிராவதற்குத் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா?

பதில்:இல்லை,இல்லை... அப்படி ஒன்றும் இல்லை எனத் தெளிவாகவே கூற முடியும். நீங்களும் நானும் பேசிக் கொண்டிருக்கும் இந்த நேரம் வரையிலும் அவ்வாறான எந்தத் தீர்மானங்களும்; மேற்கொள்ளப்படுவில்லை.

கேள்வி: - வரவு செலவுத்  திட்டத்திற்கான வாக்கெடுப்புக்கிடையில் கட்சித் தாவல்கள் இடம்பெறுவதை நாம் கண்டிருக்கின்றோம். இம்முறையும் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுமா?

பதில்: - ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலர் வரவு செலவுத் திட்டத்தில் எமக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என நினைக்கின்றேன்.

கேள்வி: -தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் வரவு செலவுத் திட்டத்தில் 1000 ரூபாயாக ஆக்கப்படும் என தோட்டத் தொழிலாளர்கள் எதிர்பார்ப்புடன் இருந்தார்கள்தானே...

பதில்: தோட்ட முதலாளிமார் மற்றும் தொழிற்சங்கங்கள் உடன்பாட்டிற்கு வந்து ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது. தற்போது அந்த சம்பளம் நாள் ஒன்றுக்கு 75- ரூபாய் எனத் தீர்மானிக்கப்பட்டு முடிந்துவிட்டது. இந்த எழுநூற்று ஐம்பதில் ஈ.ரி.எப், ஈ.பீ.எப் உள்ளது. அதே போன்று மாதத்திற்கு 21 நாள் வேலை கிடைக்கின்றது.

கேள்வி: -எனினும் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் கொடுக்க முடியாது போனால் அந்தத் தோட்டங்களை அரசாங்கம் சுவீகரிக்க வேண்டும் என அமைச்சர் கிரிஎல்ல கூறுகின்றாரே...

பதில்: -அமைச்சர் லக்ஷ்மன் கிரஎல்ல சில காலம் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சராக இருந்தவர். அவருக்கு மீண்டும் இந்த அமைச்சு கிடைத்தால் அவ்வாறு இடம்பெறுவதற்கான சந்தர்ப்பம் கிட்ட வேண்டும் என பிரார்த்திக்கின்றேன்.

கேள்வி: - க்ளைபோசெட் களைக் கொல்லி பாவனைக்கு எதிராக தொடர்ந்தும் சுற்றாடல் செயற்பாட்டு அமைப்புக்கள் செயற்படும் போது நீங்கள் அந்த களைகொல்லி தேவையே என கூறுவது ஏன்?

பதில்: - இந்த களைகொல்லியினால் சிறுநீரக நோய் ஏற்படுகின்றது என இதுவரையில் விஞ்ஞான ரீதியாக உறுதியாகவில்லை. அவ்வாறு நிரூபணமான தினத்தில் நான் அதனைத் தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்வேன்.

கேள்வி: - உங்கள் தந்தை ஐ.தே.கட்சியின் ஒரு தலைவர். அதேபோன்று கிரிக்கட் விளையாட்டிற்கு பெரும் பணியாற்றியவர். தற்போது எமது கிரிக்கட் விளையாட்டு சரிவடைந்துள்ள நிலை உங்களுக்கு எவ்வாறு தெரிகின்றது...

பதில்: - பொதுவாக கிரிக்கட் விளையாட்டில் எழுச்சியும், வீழ்ச்சியும் இயற்கையான ஒன்றே. 1970ம் 80ம் ஆண்டு காலப்பகுதியில் மேற்கிந்திய தீவுகள் அணியே கிரிக்கெட்டில் உயர்ந்த திறமைகளைக் காட்டியது.

இன்று அந்த நிலை இல்லை. மறுபுறத்தில் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையிலும் பாரிய குறைபாடுகள் உள்ளன. நான் விளையாட்டுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டதன் பின்னர் கிரிக்கெட் விளையாட்டிற்கு புதிய சட்டத்தைக் கொண்டு வர முயற்சித்தேன்.

பணத்திற்கு வாக்குகளைப் பெறும் முறையினைக் குறைப்பதே இதன் மூலம் எதிர்பார்க்கப்பட்டது. புதிய விளையாட்டுச் சட்டங்கள் தேவை. அவ்வாறில்லாமல் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையைப் பலப்படுத்த முடியாது.

கேள்வி: - அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு ஐ.தே.கட்சி தயாரா?

பதில்: - எந்த சந்தர்ப்பத்திலும் அதற்கு நாம் தயார். 

 

காமினி பண்டாரநாயகா

தமிழில்: -

எம். எஸ். முஸப்பிர்

(புத்தளம் விஷேட நிருபர்)

Wed, 03/13/2019 - 10:56


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை