வரவு – செலவுத்திட்ட வாக்கெடுப்பு இன்று மாலை

2019 வரவு - செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான முதலாவது வாக்கெடுப்பு, இன்று (12) மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. 

இதில் ஆளும் தரப்பு பெரும்பான்மை வாக்குகளினால் வெற்றியீட்டும் என ஆளும் தரப்பு அறிவித்துள்ள அதேவேளை வரவு - செலவுத் திட்டத்தை தோற்கடிக்கப் போவதாக எதிரணி தெரிவித்துள்ளது. 

2019ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் கடந்த 5ஆம் திகதி நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்ப்பிக்கப்பட்டது. 6ஆம் திகதி முதல் 6 நாட்கள் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்றது. இரண்டாம் மதிப்பீட்டு விவாதத்துக்கு ஒதுக்கப்பட்ட ஆறு நாள்கள் இன்றுடன் நிறைவடைகின்றது. இந்நிலையிலேயே, மிகவும் பரப்பரப்பான சூழ்நிலையில், வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ளது.

கடந்த வருட இறுதியில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலையையடுத்து எந்தத் தரப்பிற்கு பெரும்பான்மை பலம் உள்ளது என்ற சர்ச்சை ஏற்பட்டிருந்தது.ஐ.தே.கவுக்கு ஆதரவு வழங்குவதாக தமித் தேசிய கூட்டமைப்பு அறிவித்த நிலையில் ஐ.தே.க மீண்டும் ஆட்சியமைத்தது தெரிந்ததே. இந்த நிலையில் அரசியல் குழப்ப நிலையின் பின்னர் நடைபெறும் முதலாவது வாக்கெடுப்பே இன்று நடைபெறுகிறது. 

இந்த வரவு- செலவுத்திட்டத்தை எதிர்க்கவுள்ளதாக, ஜே.வி.பி., ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியன அறிவித்துள்ள நிலையிலே, திட்டத்தைத் தோற்கடிப்பதற்கான வியூகத்தை ஒன்றிணைந்த எதிரணி வகுத்துவருகின்றதென அறியமுடிகின்றது.

Tue, 03/12/2019 - 11:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை