போதைப்பொருள் ஒழிப்பு முப்படையும் இணைந்து கூட்டுச் செயல்திட்டம்

 சர்வதேச உதவியுடன் 2 ஆண்டு இலக்கு
 போதைப்பொருள் கடத்தும் படகுகளை நடுக்கடலில் அழிக்கவும் முடிவு

பயங்கரவாதத்தை இல்லாதொழித்தது போன்று நாட்டில் போதைப் பொருள் பாவனை முற்றாக இல்லாதொழிக்கும் பொருட்டு முப்படையினர் ஒன்றிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக முப்படைத் தளபதிகள் தெரிவித்தனர்.

ஜனாதிபதியினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதைப் பொருள் ஒழிப்பு திட்டத்திற்கு முப்படையினர் ஒன்றிணைந்த ஒத்துழைப்பை வழங்க தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்த பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன, இரண்டு ஆண்டை இலக்காக கொண்டு நாடு முழுவதிலும் போதை ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கை போதைப் பொருள் கைமாற்றப்படும் கேந்திர மையமாக இதுவரை பாதுகாப்புத் தரப்பினர் அடையாளங்காணவில்லை என்றும், இலங்கை தொடர்பில் அவ்வாறு கூறப்படுவதில் எவ்வித உண்மையும் கிடையாது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதைப்பொருள் நிவாராண மற்றும் போதைபொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முப்படையினரின் பங்களிப்பு, ஒன்றிணைந்த கூட்டு நடவடிக்கை தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விஷேட செய்தியாளர் மாநாடு கொள்ளுப்பிட்டியிலுள்ள பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் நேற்றுக் காலை (08) நடைபெற்றது.

பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன தலைமையில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனநாயக்க, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி, இராணுவப் பேச்சாளரும் பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தின்  பணிப்பாளருமான பிரிகேடியர் சுமித் அதபத்து உட்பட கடற்படை மற்றும் விமானப் படை பேச்சாளர்கள் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன இங்கு மேலும் விளக்கமளிக்கையில் :-

முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் போதை ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் பொலிஸ் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்கு உதவியாக, முப்படையின் புலனாய்வுத் துறையின் பங்களிப்புடன் இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை ஒன்றிணைந்து நடவடிக்கைகள முன்னெடுத்து வருகின்றனர். தரை வழி நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக கடற்படையினரின் படகுகளும், விமானப் படையின் விமானங்கள் இந்த நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

30 ஆண்டுகள் இந்த நாட்டில் அச்சுறுத்தலாகக் காணப்பட்ட பயங்கரவாதத்தை எமது பாதுகாப்பு படையினரின் தந்திரோபாயத்தின் மூலம் தோற்கடித்து வெற்றிக்கண்ட எமக்குப் போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கையை திட்டமிட்டு முன்னெடுக்கும் பட்சத்தில் இரண்டு வருட காலப்பகுதிக்குள் முடிவுக்கு கொண்டு வரலாம். அது ஒரு பாரிய சவால் அல்ல.

இலங்கை ஒரு தீவு எம்மை சுற்றி கடல் வளம் காணப்படுகின்றது. பாதுகாப்பு படையினரின் கெடுபிடிகளையும் தாண்டி சிலர் மிகவும் சூட்சுமமாக நாட்டிற்குள் கொண்டு வருகின்றனர். இவற்றில் அனைத்துமே பிடிபடுவதில்லை. நாட்டிற்குள் கொண்டு வரப்படும் போதைப் பொருள் மீண்டும் நாட்டிற்கு வெளியில் கொண்டு செல்லப்படுவதுமில்லை. இலங்கையில் ஹெரோயின் போதை பாவனையாளர்கள் 45 ஆயிரம் பேர் உள்ளனர் என புள்ளிவிபரம் கூறுகின்றது.

இலங்கைக்குள் போதைப் பொருள் கடத்தி வரப்படும் பிரதான கடல் மார்க்கத்தைக் கண்டுபிடித்துள்ளதாகவும் கடல் மார்க்கமாக நாட்டுக்குள் போதைப் பொருள் கொண்டுவரப்படுவதை தடுக்க சிறப்புத் திட்டங்கள் கடற்படையினர் ஊடாக முன்னெடுக்கப்பட்டு ள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டுக்குள் போதைப் பொருள் கடத்தப்படுவதற்கு முன்னர் நடுக் கடலில் வைத்து அவற்றை அழித்தால் நாட்டில் போதைப் பொருள் பிரச்சினை வராது என சுட்டிக்காட்டிய அட்மிரல் விஜேகுணரட்ன, யுத்த காலத்தில் கடலில் வைத்து புலிகளின் படகுகளை அழித்தைப் போல நடுக்கடலில் போதைப் பொருள் கடத்தப்படும் படகுகள் அழிக்கப்படும் என்றார்.

போதைப் பொருளுடன் வரும் படகுகளையும் சந்தேக நபர்களையும் 12 கடல் மைல் தூரத்துக்குள்ளேயே கைது செய்ய முடியும். அதுவே சர்வதேச சட்டம். அதற்கு அப்பால் போதைப் பொருளை அழிக்க மட்டுமே முடியும். இன்று ஆப்கானிஸ்தானில் உற்பத்தி செய்யப்படும் ஹெரோயின், மக்ரான் தளத்தின் ஊடாக ஈரான் பாகிஸ்தானின் ஊடாக இலங்கைக்கு வருகின்றது. பெரும்பாலும் இந்த மக்ரான் தளம் ஊடாக ஆபிரிக்க நாடுகள் நோக்கி போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றன.

இந்நிலையில், பஹ்ரைனைத் தளமாகக் கொண்டு நிறுவபப்ட்டுள்ள சோமாலிய கடற் கொள்ளையர்களுக்கு எதிரான ஒன்றிணைந்த கடல் நடவடிக்கை படைப் பிரிவினர் தற்போது இந்த போதைப் பொருள் கடத்தல் தொடர்பிலும் அவதானம் செலுத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

நாம் எமக்கு கிடைத்துள்ள தகவல்களை வைத்தும் உளவுத் தகவல்களை வைத்தும் அது சார்ந்த பகுப்பாய்வின் அடிப்படையிலும் இலங்கைக்குள் போதைப் பொருள் வரும் பிரதான கடல் மார்க்கைத்தைக் கண்டறிந்துள்ளோம்.

ஹெரோயின் போதைப் பொருளானது இலங்கைக்குள் மக்ரான் தளத்திலிருந்து பாகிஸ்தான் ஈரான் ஊடாக மாலைத்தீவுக்கு அப்பால் உள்ள கடல் மார்க்கமாக சுற்றித் தெற்கு கடலுக்குள் வருவது கண்டுபிடிக்கப்ப்ட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனநாயக்க கூறுகையில்,

போதைப் பொருளைக் கொண்டுவருகின்ற, விநியோகிக்கின்ற மற்றும் பயன்படுத்துகின்றவர்களுக்கு ஒரு வகையான நடவடிக்கைகளையும் நிவாரணம், பரிகாரம் மற்றும் புனர்வாழ்வு என்ற வைகயில் மற்றுமொருவகையிலான நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதே தமது நோக்கம் என்றார்.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா

கடந்த 2018ஆம் ஆண்டில் மட்டும் 41 சந்தர்ப்பங்களில் நாட்டுக்குள் கடத்தி வரப்பட்ட கேரள கஞ்சாவை நாம் கைப்பற்றினோம்.

 ஸாதிக் ஷிஹான்

 

Sat, 03/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை