அர்ஜூன் மகேந்திரன் விவகாரம்; இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பில் இராஜதந்திர பேச்சு

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை இலங்கை அழைத்து வருவது தொடர்பாக சிங்கப்பூர் பிரதமருடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனிப்பட்ட ரீதியில் பேச்சுக்களை நடத்தி வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

ஆரம்பக் கைத்தொழில் சமூக வலுவூட்டல் அமைச்சு,பொது வழங்கல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்புப்பற்றிய அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு, விசேட பிரதேசங்கள் அபிவிருத்தி பற்றிய அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதம் நடைபெற்றது.இதில் உரையாற்றிய ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜெயதிஸ்ஸ, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை இலங்கைக்கு அனுப்புமாறு இலங்கை அரசு முறையான ஆவணங்கள் எதனையும் இதுவரை தங்களுக்கு சமர்ப்பிக்கவில்லையென்றும் சமர்ப்பிக்கப்பட்ட சில ஆவணங்களிலும் குறைபாடுகள் காணப்படுவதாகவும் சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

இதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர பதிலளித்தார். மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை இலங்கை அழைத்து வருவதற்காக சிங்கப்பூர் பிரதமருடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனிப்பட்ட ரீதியில் பேச்சுக்களை நடத்தியிருக்கிறார். முறையான எழுத்துமூல கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

Fri, 03/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை