‘ஆவா’ குழு முக்கியஸ்தர் ஆயுதங்களுடன் நேற்று கைது

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் வாள்வெட்டு வன்முறைகளின் பிரதான சந்தேகநபர் நேற்று வியாழக்கிழமை அதிகாலை தனங்களப்பில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 3 வாள்கள், முகமூடிகள் மீட்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக தலைமறைவாகியிருந்த இந்தச் சந்தேகநபரை யாழ்ப்பாணம் சிறப்புக் குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர் என்றும் பொலிஸார் கூறினர்.

“ஆவா குழுவிலிருந்து செயற்பட்ட இந்தச் சந்தேகநபர், மானிப்பாய் தனுறொக் என்பவர் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களின் வீடுகளைத் தாக்கி வந்த கும்பலைச் சேர்ந்தவர். அத்துடன் கடந்த ஆண்டு மருதனார்மடம் பகுதியில் சுன்னாகம் பொலிஸாரால் வாள்களுடன் கைது செய்யப்பட்ட கும்பலில் இருந்த இந்த நபர் தப்பித்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஒரு வருடமாக தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் தனங்களப்பு பகுதியிலுள்ள வீடொன்றில் மறைந்திருக்கின்றார் என்று யாழ்ப்பாணம் சிறப்புக் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அந்தப் பிரிவுக்குப் பொறுப்பான ரஞ்சன் எதிரிசிங்க தலைமையிலான அணியினர் நேற்று நள்ளிரவு சந்தேகநபர் மறைந்திருந்த வீட்டைச் சுற்றிவளைத்தனர்.

பொலிஸார் சுற்றிவளைத்ததை அறிந்த சந்தேகநபர் தப்பிக்க முயற்சித்த வேளை கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து வாள்கள் இரண்டு, முகமூடிகள் மூன்றும் கைப்பற்றப்பட்டன. சாவகச்சேரி, சுன்னாகம் பொலிஸ் பிரிவுகளில் தலா 2 குற்றச்செயல்களிலும் மானிப்பாய் பொலிஸ் பிரிவில் 3 குற்றச்செயல்களிலும் சந்தேகநபருக்கு எதிராக வழக்குகள் உள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்.விசேட நிருபர்

Fri, 03/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை