கிராம சேவகர்களுக்கு வீதியில் இறங்கி போராட தொழிற்சங்க உரிமை இல்லை

கிராம சேவகர்களுக்கு வீதியில் இறங்கிப் போராட எந்த தொழிற்சங்க உரிமையும் கிடையாது. 9 கிராம ​சேவகர் தொழிற்சங்கங்களில் ஒன்று மாத்திரமே போராட்டம் நடத்தியது என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். 27/2 நிலையியற் கட்டளையின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். கிராம சேவகர்களினால் குற்றச் செயல்களை தடுப்பதற்கு பங்காற்ற முடியும். கிராமத்திற்கு பெரும் சேவையாற்றும் கிராம சேவகர்களின் முதற் தடவையாக தமது உரிமைகளுக்காக வீதியில் இறங்கி போராடியுள்ளனர். அரசியல் நோக்கில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களை சேவையில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிராம சேவகர்களின் உரிமைகளை இரத்து செய்வதை நிறுத்த வேண்டும். அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து அவர்களுடன் பேசி நியாயமான தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.இதற்குப் பதிலளித்த

அமைச்சர் வஜிர அபேவர்தன,

14,000 கிராம சேவகர்களின் தொகையை 7,000ஆக குறைக்க கடந்த ஆட்சியில் திட்டமிடப்பட்டது.அதனை நீதிமன்றம் சென்று தடுத்தோம். 9 கிராம சேவகர் சங்கங்களில் ஒரு சங்கம் மாத்திரமே போராட்டம் நடத்தியுள்ளது. ஆனால் 8 தொழிற்சங்கங்களும் தாம் இதில் பங்கேற்கவில்லை என எழுத்து மூலம் அறிவித்திருந்தன.

தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் மாவட்ட நிர்வாகத்தை பலப்படுத்த பிரதமர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

2014 இல் 13,990 ரூபாவாக இருந்த கிராம சேவகர் சம்பளம் 2020 இல் 28,940 ரூபாவாக உயர்கிறது. அலுவலக கொடுப்பனவு, ஆவணங்கள் கொடுப்பனவு, போக்குவரத்து கொடுப்பனவு என்பனவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு வகையான உதவிகளை கிராம சேவகர்கள் சேர்ப்பதை நிறுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரினார். அதற்கு நாம் தயார்.கிராம சேவகர்களுக்கு அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு தொழிற்சங்க உரிமை கிடையாது. வீதியில் இறங்கி போராட்டம் நடத்த முடியாது என்றார்.

தயாசிறி ஜெயசேகர எம்.பி

தமது உரிமைகளை கோரி முதற்தடவையாக கிராம சேவகர்கள் வீதியில் இறங்கி போராடினார்கள். அவர்களுடன் ​பேசி பிரச்சினையை தீர்க்க வேண்டும்.

அநுர குமார திசாநாயக்க எம்.பி

போராட்டம் நடத்திய கிராம சேவகர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தால் வேறு பிரச்சினைகள் தலைதூக்கும். அவர்களின் சேவை யாப்பு தொடர்பில் பிரச்சினை இருக்கிறது. பொது பிரச்சினையில் கிராம சேவகர் சங்கங்களிடையே உடன்பாடு இருந்தாலும் ஆட்சேர்ப்பு தொடர்பில் தான் முரண்பாடு இருக்கிறது.பட்டதாரிகளை நியமிக்க வேண்டும் என ஒரு தரப்பும் மற்றொரு தரப்பு உயர்தர தகைமை எனவும் கோருகின்றன.

அமைச்சர் வஜிர அபேவர்தன

ஆட்சேர்ப்பிற்காக கல்வித் தகைமை தொடர்பில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பட்டதாரிகளை தொடர்ச்சியாக நியமிப்பது கஷ்டம்.இருந்தாலும் உச்ச தகைமையாக அதனை பேண இருக்கிறோம் என்றார்.

 ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

Fri, 03/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை