வெளிநாட்டுப் பணிப்பெண்களுக்காக சுங்கத் தீர்வையற்ற விற்பனைக் கூடங்கள் தேவை

அந்நியச் செலாவணிக்கு பெற்றுத்தரும் பங்களிப்பை பொறுத்து நாடு திரும்பும் வெளிநாட்டு பணிப்பெண்கள் கொள்வனவு செய்வதற்காக சுங்கத் தீர்வையற்ற பொருட்களின் விற்பனைக் கூடங்களை நிறுவ அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.  

நாட்டுக்கு அதிக அந்நிய செலாவணியை பெற்றுத் தரும் பணிப்பெண்கள் வெறும் கைகளுடனேயே நாடு திரும்ப வேண்டியுள்ளது. இது அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் பெரும் ஏமாற்றத்தை யளிக்கிறது.

சம்பளம் மற்றும் அந்நிய செலாவணிக்கு வழங்கும் பங்களிப்பு என்பவற்றைப் பொறுத்து வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கான சுங்கத்தீர்வைக் கொடுப்பனவை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தனிப்பட்ட முறையில் வரையறை செய்ய வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.  

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை (18) காணி அமைச்சு, விளையாட்டுத்துறை அமைச்சு, தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் கருத்து தெரிவிக்கும்போதே பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி இவ்வாறு தெரிவித்தார்.  

வெளிநாட்டில் தொழில் செய்யும் பணியாளர்களுக்கு இச்சலுகை பெரும் நிம்மதியளிப்பதாக இருக்குமென சுட்டிக்காட்டிய ஹந்துநெத்தி எம்.பி முதற்கட்டமாக கொழும்பு, கண்டி, அம்பாறை, மாத்தறை ஆகிய பிரதேசங்களில் இவர்களுக்கான சுங்கத்தீர்வையற்ற விற்பனைக் கூடங்கள் திறக்கப்பட வேண்டுமென்றும் பாராளுமன்றத்தில் கேட்டுக் கொண்டார்.  

இதன்மூலம் நாடு திரும்புபவர்கள் தமது பிள்ளைகளுடன் குறித்த கடைக்குச் சென்று கடவுச்சீட்டைக் காட்டி தேவையான பொருட்களை கொள்வனவு செய்யக்கூடியதாக இருக்குமென்றும் அவர் இச்சந்தர்ப்பத்தில் வலியுறுத்தினார்.  

அவர் உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது-  தொழில் நிமித்தம் வௌிநாடு செல்வோருக்கு வாக்குரிமை இல்லாததன் காரணமாகவே அவர்கள் பெரும்பாலும் அரசியல்வாதிகளால் புறக்கணிக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் தாங்கள் தொழில் செய்யும் நாட்டில் இலங்கைத் தூதரகத்துக்கு நேரில் சென்று வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை தொழில் அமைச்சு முன்னெக்க வேண்டும். சுமார் 30 இலட்சம் இலங்கையர்கள் வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு வாக்களிப்பதற்கான வசதிகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.  

(லக்ஷ்மி பரசுராமன், மகேஸ்வரன் பிரசாத்)  

Tue, 03/19/2019 - 10:46


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை