சாய்ந்தமருதில் முன்னாள் அதிபர் கிணற்றில் தவறி வீழ்ந்து மரணம்

சாய்ந்தமருதில் பழைய தபாலக வீதியை சேர்ந்த ஓய்வு நிலை அதிபர் அப்துல் கரீம் முஹமட் நியாஸ் (66) என்பவரின் மரணம் கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கியதால் ஏற்பட்டது என்று  கல்முனைப்பற்று மரண விசாரணை அதிகாரி இப்ராஹிம் நஸ்ரூல் இஸ்லாம் தீர்ப்பளித்துள்ளார்.

ஓய்வு நிலை அதிபர் அப்துல் கரீம் முஹமட் நியாஸ் நேற்று (18) அதிகாலை வழக்கம் போல காலை தொழுகைக்கு பள்ளிவாசலுக்கு சென்றுள்ளார். காலை 7.30மணி அளவில் மகள் தேநீர் கொண்டு சென்றபோது அறைக்குள் இவரை காணவில்லை. 10.00மணிக்கு பின்பு பார்த்தபோதும் வீட்டில் இவரை காணவில்லை. இதனால் இவரை தேட தொடங்கினார். சந்தேகத்தில் வீட்டு கிணற்றை பார்த்தபோது கிணற்றின் மேற்பரப்பில் மூடி இருந்த டெங்கு நுளம்பு தடுப்பு வலை அகற்றப்பட்டு இருப்பதை கண்டார்.

இவர் கணவனுக்கு தகவலை சொல்ல கணவன் கிணற்றுக்குள் இறங்கி தடியால் தட்டி பார்த்தபோது பொருள் ஒன்று தட்டுப்பட்டு இருக்கின்றது. இவர் அயலவர்களை துணைக்கு அழைத்து, கிணற்றுக்குள் ஏணி வைத்து இறங்கி பார்த்தபோது உடலத்தை கண்டார். அயலவர்களின் உதவியுடன் உடலம் வெளியில் எடுக்கப்பட்டது. இம்மரணம் தொடர்பாக மாலை 6.30மணிக்கு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. பொலிஸார் 7.30மணிக்கு மரண விசாரணை அதிகாரி இஸ்லாமுக்கு தகவல் வழங்கி, 8.00மணிக்கு இறந்தவரின் வீட்டுக்கு மரண விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

இறந்தவரின் மகள், மருமகன், மகன் ஆகியோரின் வாக்குமூலங்களை மரண விசாரணை அதிகாரி இஸ்லாம் பதிவு செய்தார். வீட்டில் பல நூற்று கணக்கானோர் திரண்டு காணப்பட்டனர். இவர்களிடமும் சம்பவத்தை கேட்டு அறிந்தார். மரணத்தில் சந்தேகம் கிடையாது என்கிற முடிவுக்கு வந்ததுடன் இம்மரணம் கிணற்றில் தவறி விழுந்ததால் நீரில் மூழ்கி ஏற்பட்டது என்று தீர்ப்பளித்து உடலத்தை 9.40மணி அளவில் பிள்ளைகளிடம் கையளித்தார்.

13அடி ஆழம் உள்ள கிணற்றில் 81/2அடி ஆழத்துக்கு தண்ணீர் இருந்து உள்ளது. இறந்தவருக்கு இரு பெண்கள் அடங்கலாக 04பிள்ளைகள் உள்ளனர்.

(கல்முனை மத்திய தினகரன் நிருபர் - அஷ்ரப் கான்)

Tue, 03/19/2019 - 10:39


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை