அரசியல் தீர்வொன்றைப் பெறுவதில் தொடர்ந்தும் விட்டுக்ெகாடுக்க தயார்

அரசியல் தீர்வைக் காண்பதற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்கொண்டு செல்லப்போகின்றோமா அல்லது அவற்றைத் தூக்கி எறிந்துவிட்டு யுத்தம் மீண்டும் உருவாகும் சூழலுக்கான ஆபத்தை எதிர்கொள்ளப்போகின்றோமா என்பதை அரசியல் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வொன்றை வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ ஆகிய மூன்று பிரதான தலைவர்களும் ஏற்கனவே இணங்கியுள்ள நிலையில், சகலரும் சமமாக மதிக்கப்படக்கூடிய வகையில், அரசியல் தீர்வொன்று விரைவில் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

வரவு செலவுத்திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான ஆறாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இரா.சம்பந்தன் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றாத நிலையில், மக்களின் நம்பிக்கையை அரசாங்கத்தினால் வெற்றிகொள்ள முடியாது. அரசியல் ரீதியான ஸ்திரத் தன்மையை ஏற்படுத்தும் அதேநேரம், பொருளாதார ரீதியான ஸ்திரத் தன்மையை ஏற்படுத்தாவிட்டால் வெளிநாட்டு முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டுவர முடியாது என்றும் அவர் விமர்சித்தார்.

13ஆவது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்ட அதிகாரப் பகிர்வுக்கும் அப்பால் சென்று அதிகாரங்களைப் பகிர்வதற்கு மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் இணங்கியிருந்தார். அவருடைய அரசாங்கம் இந்த விடயத்தை இந்தியாவிடமும் கூடத் தெரிவித்திருந்தது. அதேநேரம், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரும் அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஒரே மாதிரியான நிலைப்பாட்டில் இருக்கின்றனர். நாட்டின் மூன்று பிரதான தலைவர்களும் அதிகாரப் பகிர்வு விடயத்தில் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதால், அரசியல் தீர்வு விடயத்தில் மேலும் காலத்தை இழுத்தடிக்காது விரைவில் தீர்வொன்றை வழங்க வேண்டும்.

13ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வு என்பது தீர்வு அல்ல. அது ஓர் ஆரம்பம் மட்டும் தான். மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஆகக்கூடிய அதிகாரப் பகிர்வை வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் இருந்தது. இந்த நிலையில் தற்பொழுது அரசியல் தீர்வொன்றைக் காண்பதில் அவர்கள் எதிர்ப்பதற்கான ஏற்றுக் கொள்வதாக இல்லை.

ஆட்சியில் அதிகாரப் பகிர்வு, சகலரும் சமமானவர்கள் என்ற எண்ணப்பாடு போன்றவற்றை ஏற்படுத்துவதன் ஊடாகவே அர்த்தமுள்ள அரசியல் தீர்வொன்றைக் கொண்டு வரமுடியும். இது விடயத்தில், பிரதானமாகவுள்ள மூன்று அரசியல் தலைவர்களும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலத்திலிருந்து அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் இதுவரை பல யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் பாராளுமன்றம் முழுவதும் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டு வழிநடத்தல் குழுவின் அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டள்ளன. இதுவரை முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளை வீசிவிட்டு மீண்டும் யுத்தம் ஏற்படும் சூழலுக்கான ஆபத்தை எதிர்கொள்ளப் போகின்றோமா அல்லது பொறுப்புணர்வுடன் சகலரும் இணைந்து அரசியல் தீர்வொன்றைக் கொண்டுவரப்போகின்றோமா என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.

பிரபாகரன் மீண்டும் எழுச்சிபெறப்போவதில்லை. தமிழ் மக்களும், தமிழ் அரசியல் தலைவர்களான நாமும் அரசியல் தீர்வொன்றைப் பெறுவதற்கு பல்வேறு விட்டுக்கொடுப்புக்களை மேற்கொண்டிருப்பதுடன், தொடர்ந்தும் விட்டுக் கொடுப்புக்களுக்கு தயாராக இருக்கின்றோம்.

எனவே, விரைவில் அரசியல் தீர்வொன்றை வழங்குவது காலத்தின் தேவையாகும்.

அதேநேரம், அரசாங்கம் சமர்ப்பித்திருக்கும் வரவுசெலவுத்திட்டத்தில் யுத்தத்தினால் நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்குப் பகுதிகளின் வீடமைப்பு, உட்கட்டமைப்பு அபிவிருத்தி போன்ற விடயங்களுக்கு கணிசமானளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக துரித அபிவிருத்திக்காக தனியான நிதியமொன்றை உருவாக்கியமைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

Wed, 03/13/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக