துப்பாக்கிச் சட்டத்தை கடுமையாக்க நியூசிலாந்து அமைச்சரவை ஒப்புதல்

நியூசிலாந்தில் 50 பேர் கொல்லப்பட்ட இரு பள்ளிவாசல்களில் இடம்பெற்ற தாக்குதல்களை அடுத்து அந்நாட்டு துப்பாக்கிச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரும் அறிவிப்பை அந்நாட்டு பிரதமர் ஜெசின்டா ஆர்டர்ன் வெளியிட்டுள்ளார்.

துப்பாக்கிச் சட்டத்தை மாற்றும் திட்டத்திற்கு அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்திருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளை மேலதிக்கவாதி என தம்மை அறிவித்துக் கொண்ட 28 வயது அவுஸ்திரேலியரான பிரன்டன் டர்ரன் இந்த கொலைகள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

கொலையாளி அதிக உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடிய இராணுவ வடிவிலான துப்பாக்கியை பயன்படுத்தியிருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறான துப்பாக்கி வைத்திருக்க நியூசிலாந்து சட்டத்தில் அனுமதி உள்ளது.

நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்த சட்ட திருத்தம் குறித்து பிரதமர் ஆர்டர்ன் குறிப்பிட்டபோதும் அது பற்றி எந்த விபரத்தையும் வெளியிடவில்லை. எனினும் அது பற்றி விரைவில் வெளியாகும் என்று தெரிவித்தார்.

“இந்த பயங்கர தீவிரவாத செயலுக்கு 10 தினங்களுக்குள் நாம் இந்த சீர்திருத்தங்களை அறிவிப்போம், அது சமூகத்தை பாதுகாக்கும் என்று நம்புகிறோம்” என்று அவர் குறிப்பிட்டார்.

அர்டர்ன் தனது கூட்டணி அரசைச் சேர்ந்தவரான பிரதிப் பிரதமர் வின்ஸ்டன் பீட்டருடன் இந்த ஊடக சந்திப்பில் பங்கேற்றிருந்தார். பீட்டர் முன்னர் இந்த திருத்தத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு வந்தார்.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு இணையதளத்தின் ஊடே நான்கு துப்பாக்கிகளை விற்றதாக துப்பாக்கி விற்பனை நிலையமான 'கன் சிட்டி' குறிப்பிட்டுள்ளது. எனினும் பள்ளிவாசல் மீது சூடு நடத்திய ஆற்றல் மிக்க துப்பாக்கியை தாம் விற்கவில்லை என்று அது குறிப்பிட்டுள்ளது.

தாம் ஏ ரக துப்பாக்கிகளையே விற்றதாக அந்த துப்பாக்கி நிலையத்தின் நிறைவேற்று அதிகாரி டேவிட் டிரிப்பிள் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் துப்பாக்கிச் சட்டத்தின் கீழ் ஏ ரக துப்பாக்கிகள் அரை இயந்திரத் துப்பாக்கிகளாக இருக்க முடியும் என்றபோதும் ஏழு குண்டுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டதாகும். தாக்குதல் தொடர்பான வீடியோவில் தாக்குதல்தாரி அதிக குண்டுகள் பாயன்படுத்தக்கூடிய துப்பாக்கியை வைத்திருந்தது தெரிந்தது. எனினும் நியூசிலாந்து சட்டத்தில் அவ்வாறான துப்பாக்கிகளுக்கு அனுமதி உள்ளது.

நியூசிலாந்தில் 1.5 மில்லியன் பேரிடம் தனிப்பட்ட துப்பாக்கிகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு பின்னர் அரை-இயந்திரத் துப்பாக்கிகளுக்கு தடைவிதிக்க அழுத்தம் அதிகரித்துள்ளது.

வேட்டை கலாசாரம் மற்றும் வலுவான துப்பாக்கி ஆதரவு பிரசாரங்களால் துப்பாக்கிச் சட்டத்தை இறுக்குவதற்கு முன்னெடுக்கப்பட்ட முந்தைய முயற்சி தோல்வி அடைந்தது.

பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களை அந்த துப்பாக்கிதாரி நேரடியாக ஒளிபரப்பி இருந்தார். அந்த வீடியோவை தடை செய்திருக்கும் பொலிஸார் அதனை வைத்திருப்பது, வழங்குவது குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நேரடி ஒளிபரப்பு வீடியோவை விநியோகித்த குற்றத்திற்காக 18 வயது இளைஞர் ஒருவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பள்ளிவாசலின் படத்தை வெளியிட்டு “அடையாளம் காணப்பட்ட இலக்கு” என்று குறிப்பிட்ட மற்றொரு பதின்ம வயது இளைஞன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் அதிகபட்சம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க முடியும் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தாக்குதல் இடம்பெற்ற முதல் 24 மணி நேரத்திற்குள் உலகெங்கும் இருந்து தாக்குதல் தொடர்பான 1.5 மில்லியன் வீடியோக்கள் அகற்றப்பட்டதாக பேஸ்புக் குறிப்பிட்டது.

இந்நிலையில் ஆபத்தான நிலையில் தொடர்ந்து ஒன்பது பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொல்லப்பட்டவர்களின் உடல்கள் இன்னும் விடுவிக்கப்படாதது குறித்து குடும்பத்தினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு உடல் விடுவிக்கப்பட்ட நிலையில் கொல்லப்பட்ட மற்றொரு உறவினரின் உடல் விடுவிக்கப்படும் வரை காத்திருப்பதாக குடும்பம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. நேற்று எந்த உடலும் அடக்கம் செய்யப்படவில்லை.

உயிரிழந்த பின் முடியுமான விரைவில் உடலை நல்லடக்கம் செய்வது இஸ்லாமிய மரபாக உள்ளது.

தாக்குதல் நடத்திய துப்பாக்கிதாரி எவ்வித மனநோயாலும் பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரைப் பிரதிநிதித்துவப் படுத்தும், நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் இதனைத் தெரிவித்தார்.

துப்பாக்கிதாரி தற்போதுள்ள நிலையை நன்கு புரிந்துவைத்திருப்பதுபோல் தோன்றுவதாகவும், வழக்கில் தம்மைத் தாமே அவர் பிரதிநிதித்தும் கொள்வார் என்றும் அந்த வழக்கறிஞர் கூறினார்.

சந்தேக நபர் விசாரணையை எதிர்நோக்கத் தகுதியான நிலையில் இல்லாமல் இருக்கக்கூடுமென சிலர் வெளியிட்ட கருத்தை அவர் மறுத்தார்.

கடந்த சனிக்கிழமை, பிரன்டன் டர்ரன்ட் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அன்று பொறுப்பில் இருந்த வழக்கறிஞர் ரிச்சர்ட் பீட்டர்ஸ் முதற்கட்ட விசாரணையில் டர்ரன்டை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

இருப்பினும், தான் சார்பில் வழக்கறிஞர் தேவையில்லை என ட்ரான்ட் கூறிவிட்டார்.

இதனிடையே இந்த படுகொலை சம்பவங்களுடன் தொடர்புபட்டு அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இரு வீடுகளில் பொலிஸார் நேற்று சோதனை நடத்தினர்.

இதில் ஒரு வீடு ட்ரான்டின் சகோதரி உடையது என்று அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவரது குடும்பத்தினர் அதிகாரிகளுடன் ஒத்துழைப்போடு செயற்பட்டதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

பிரன்டன் டர்ரன்ட் உறுவினர் ஒருவர் கூறும்போது, “அங்கு கொல்லப்பட்ட, காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எமது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

இந்த தாக்குதலில் ஒருவர் மாத்திரமே ஈடுபட்டிருப்பதாக நியூசிலாந்து பொலிஸார் நேற்று உறுதி செய்தபோதும், ஏனையோர் அவருக்கு உதவி இருப்பதற்கான வாய்ப்பை அவர்கள் மறுக்கவில்லை.

Tue, 03/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை