கடந்த மூன்று வருடத்தில் உயர்கல்வி அபிவிருத்திக்கு 96 வீதம் மேலதிக நிதி செலவு

2011-  2014 காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் கடந்த மூன்று வருட காலத்தில் உயர்கல்வி அபிவிருத்திக்கு 96 வீதம் மேலதிக நிதி செலவிடப்பட்டதாக நகர திட்டமிடல்,நீர்வழங்கல், மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

வடக்கில் இரண்டாவது பல்கலைக்கழகம் உருவாக்க விரைவில் நடவடிக்கை எடுக்க இருப்பதாக குறிப்பிட்ட அவர், பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கும் மருத்துவ மாணவர்களின் தொகையை 300 ஆல் அதிகரிக்க புதிதாக மருத்துவ பீடங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

நகர திட்டமிடல்,நீர்வழங்கல், மற்றும் உயர்கல்வி அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

உயர்கல்வித் துறையில் புரட்சிகரமான மாற்றங்களை எமது அரசு மேற்கொண்டுள்ளது. 2011-2014ஆம் ஆண்டுகளில் பல்கலைக்கழக கல்விக்காக 104.9 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. ஆனால் 2015- --– 2018 காலப்பகுதியில் இது இரு மடங்காக அதிகரிக்கப்பட்டது. முதலீட்டு நிதி 83 வீதத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கடந்த ஆட்சியுடன் ஒப்பிடுகையில் உயர்கல்விக்காக கடந்த அரசை விட 96 வீதம் மேலதிக நிதி முதலீடு செய்யப்பட்டது. வடக்கில் இரண்டாவது பல்கலைக் கழகம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. வன்னி வளாகம் அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதோடு விரைவில் முழுமையான பல்கலைக்கழகமாக இது மாற்றப்படும்.

சகல பல்கலைக்கழகங்களுக்கும் 100 மில்லியன் ரூபா ஒதுக்கி தேவையான முன்னேற்றங்களை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வயம்ப பல்கலைக்கழகத்தில் 3224 மில்லியன் ரூபா செலவில் மருத்துவ பீடம் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மொரட்டுவையில் குவைத் நாட்டின் உதவியுடன் மருத்துவ பீடம் அமைய இருப்பதோடு ருகுணு பல்கலைக்கழகத்திலும் 12 மாடிகளுடன் கூடிய மருத்துவ பீடம் நிர்மாணிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவை பூர்த்தியடைந்த பின்னர் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கும் மருத்துவ பீட மாணவர்களின் தொகை 300 இனால் அதிகரிக்கப்படும்.

பல்கலைக்கழகங்களில் இருந்து பகிடிவதையை முற்றாக்க ஒழிக்க வேண்டும். பகிடிவதை காரணமாக இதுவரை 1987 மாணவர்கள் பல்கலைக்கழகங்களை விட்டும் விலகிச் சென்றுள்ளனர். இதனை தடுக்க பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்க இருக்கிறது. மனிதாபிமானமற்ற முறையில் பகிடிவதைகள் மேற்​கொள்ளப்படுகின்றன. மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க ​வேண்டும். பாலியல் தொந்தரவுகளையும் தடுக்க வேண்டும். 2018 முதல் ஒன்லைன் ஊடாக முறையிட வசதி உருவாக்கப்பட்டுள்ளது. 

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

Sat, 03/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை