737 மெக்ஸ் ரக விமானங்கள் பறப்பதற்கு உலகெங்கும் தடை

எத்தியோப்பிய விமான விபத்தில் புது தடயம்

எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் இருந்து புதிய தடயங்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, போயிங் நிறுவனம் அதன் 737 மெக்ஸ் ரக விமானங்கள் அனைத்தையும் சேவையிலிருந்து முடக்குவதாக அறிவித்துள்ளது.

அந்த ரகத்தைச் சேர்ந்த அனைத்து 371 விமானங்களையும் சேவையில் இருந்து முடக்குவதாக அமெரிக்க விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங் கூறியது.

அமெரிக்க ஜனாதிபதி டோனால்ட் டிரம்பும் அது குறித்து முன்னதாகப் பேசினார்.

போயிங் 737 மெக்ஸ் 8, மெக்ஸ் 9 ரக விமானங்களையும், அந்த வரிசையுடன் தொடர்புடைய மற்ற விமானங்களையும் சேவையில் இருந்து முடக்குவதற்கு அவசர ஆணை பிறப்பிக்கப்படும் என அவர் அறிவித்திருந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை எத்தியோப்பியன் ஏர்லைன்ஸின் போயிங் 737 மெக்ஸ் விமானம் ஒன்று, அடிஸ் அபாபா நகரில் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் இருந்த 157 பேரும் உயிரிழந்தனர்.

சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்ட தடயங்கள் மற்றும் செயற்கைக் கோள் தகவல்கள் அந்த ரகத்தைச் சேர்ந்த விமானங்களுக்குத் தற்காலிகத் தடை விதிக்க முடிவெடுப்பதற்குத் தூண்டியதாக அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்தது.

எத்தியோப்பிய விபத்தைத் தொடர்ந்து ஏற்கனவே இந்தியா, பிரிட்டன், சீனா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் இந்த விமானத்துக்கு தடை விதித்திருந்தன. ஆனால், இந்த விமானத்தில் குறைபாடு இருப்பதாக காட்டுவதற்கு ஆதாரம் இல்லை என்று கூறி அமெரிக்கா மட்டும் தடைவிதிக்க மறுப்புத் தெரிவித்து வந்தது.

5 மாதங்களில், அந்த ரகத்தைச் சேர்ந்த விமானம் விழுந்து நொறுங்கிய, இரண்டாவது சம்பவம் இதுவாக இருந்தது. இந்தோனேசியாவில் ஏற்பட்ட முதல் சம்பவத்தில், 189 பேர் உயிரிழந்தனர்.

இந்த இரு விபத்திலும் விமானம் பறக்க ஆரம்பித்த பின்னர் வான் வெளியில் அதன் வழித்தடத்தில் சென்ற பாங்கு கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்துள்ளது என்று அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விபத்துக்குள்ளான பகுதியில் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபையுடன் இணைந்து அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகமும் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டது.

தனது 737 மெக்ஸ் ரக விமானங்களின் பாதுகாப்பில் தொடர்ந்து முழு நம்பிக்கை கொண்டிருப்பதாக போயிங் நிறுவனம் கூறியது. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து 737 மெக்ஸ் ரக விமானங்களையும் சேவையில் இருந்து முடக்குவதாக அது தெரிவித்தது.

எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமான விபத்துக்கு பின்னர், அமெரிக்க விமானப் போக்குவரத்துக் கண்காணிப்பு அமைப்புகளுடன் நடத்திய கலந்துரையாடலைத் தொடர்ந்து, போயிங் இவ்வாறு கூறியது.

“விசாரணையாளர்களுடன் இணைந்து இந்த விபத்துக்கான காரணங்களை புரிந்துகொள்ள எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். பாதுகாப்பை மேம்படுத்தவும் மேலும் இது போன்ற நிகழ்வுகள் இனிமேல் நடக்காமல் இருக்க ஆவண செய்கிறோம” என போயிங் நிறுவன தலைவர் டென்னிஸ் முலென்பர்க் தெரிவித்துள்ளார்.

போயிங் நிறுவனம் தனது மெக்ஸ் ரக விமான இயக்கத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்ததையடுத்து அதன் பங்குகள் சரிந்தன.

கடந்த வாரம் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமான விபத்துக்குள்ளானதில் இருந்தே போயிங் நிறுவனத்தின் சந்தை மதிப்பு கிட்டதட்ட 26 பில்லியன் டொலருக்கு குறைந்துள்ளது.

இதனிடையே எத்தியோப்பியாவில் விபத்துக்கு உள்ளான போயிங் 737 மெக்ஸ் 8 விமானத்தில் இரு கறுப்புப் பெட்டிகளும் ஆய்வுக்காக பிரான்ஸுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

விமானத் தரவுப் பதவு மற்றும் விமானிக் குரல் பதிவு ஆய்வுக்கான வசதிகள் எத்தியோப்பியாவிடம் இல்லாததால் அவை பிரான்ஸுக்கு அனுப்பப்படுவதாக எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் குறிப்பிட்டுள்ளது.

விமான விபத்துக்கான காரணம் பற்றி இந்த கறுப்புப் பெட்டிகள் மூலம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Fri, 03/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை