16 பேர் கொண்ட உத்தேச இலங்கை அணி அறிவிப்பு

கட்டாரில் அடுத்த மாதம் 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 23ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கவுள்ள 16 பேர் கொண்ட உத்தேச இலங்கை மெய்வல்லுனர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அறிவிக்கப்பட்டுள்ள அணியில் பெண்களுக்கான 4 x 400 அஞ்சலோட்ட அணிக்காக டில்ஷி குமாரசிங்க , உபமாலிகா ரத்னகுமாரி ஆகியோரது பெயர்களை பரிந்துரை செய்வதற்கு இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ இதற்கான அனுமதியை இதுவரை வழங்கவில்லை என இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் தெரிவித்துள்ளது. ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரினை இலக்காகக் கொண்டு இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட தகுதிகாண் போட்டிகளின் முதலாவது கட்டம் கடந்த பெப்ரவரி மாதம் 22ஆம் மற்றும் 24ஆம் திகதிகளிலும், இரண்டாவது கட்டம் கடந்த வெள்ளிக்கிழமையும் (22) கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றன.

இதில் ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடருக்கான அடைவு மட்டத்தினைப் பூர்த்தி செய்த 9 வீரர்களும், 7 வீராங்கனைகளும் குறித்த போட்டித் தொடரில் பங்கேற்பதற்கான வாய்ப்பினைப் பெற்றுக்கொண்டனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆண்களுக்கன 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட தெற்காசியாவின் அதிவேக வீரரான ஹிமாஷ ஏஷான், கடந்த மாதம் நடைபெற்ற முதலாவது தகுதிகாண் போட்டியில் புதிய இலங்கை சாதனை படைத்தார். குறித்த போட்டியை 10.22 செக்கன்களில் நிறைவு செய்த அவர், இலங்கையில் மாத்திரமல்லாது தெற்காசியாவின் அதிவேக வீரராகவும் மாறினார்.

கடந்த வெள்ளக்கிழமை நடைபெற்ற இரண்டாவது கட்ட தகுதிகாண் போட்டியிலும் பங்குபற்றியிருந்த ஹிமாஷ, போட்டியை 10.24 செக்கன்களில் நிறைவுசெய்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. ஆண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட இளம் வீரர் கிரேஷன் தனன்ஜய புதிய இலங்கை சாதனையுடன் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார். போட்டியில் அவர் 16.71 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து தனது திறமையை வெளிப்படுத்தியிருந்ததுடன், ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்குபற்றும் வாய்ப்பையும் பெற்றுக்கொண்டார்.

இது இவ்வாறிருக்க, கடந்த வருடம் இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றும் வாய்ப்பை இறுதி நேரத்தில் தவறவிட்ட, ஈட்டி எறிதல் வீரர் சுமேத ரணசிங்க, நீளம் பாய்தல் வீரர் தனுஷ்க பிரியரத்ன மற்றும் 1500 மீற்றர் ஓட்ட வீரர் ஹேமன்த குமார ஆகியோர் இம்முறை தகுதிகாண் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை உறுதி செய்தனர்.

கடந்த வருடம் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழா மற்றும் ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய நீளம் பாய்தல் வீரரான ஜானக பிரசாத் விமலசிறியும், இம்முறை ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரிற்கான அடைவு மட்டத்தினைப் பூர்த்தி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் நிறைவுக்கு வந்த இரண்டாம் கட்ட தகுதிகாண் போட்டிகளில் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் எந்தவொரு வீரரும் எதிர்பார்த்தளவு நேரப் பெறுமதியை எட்டாத காரணத்தால் இதுவரை காலமும் உள்ளடக்கப்பட்டிருந்த 4 x 400 அஞ்சலோட்ட அணியை இம்முறை ஆசிய மெய்வல்லுனர் சம்பயின்ஷிப் போட்டித் தொடரில் இருந்து நீக்குவதற்கு இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆண்களுக்கான 400 மீற்றர் தனிநபர் போட்டியில் அண்மைக்காலமாக தேசிய மற்றும் சர்வதேச வெற்றிகளைப் பதிவுசெய்து வருகின்ற இளம் வீரர் அருண தர்ஷன, காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக இம்முறை ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்குபற்றும் வாய்ப்பை தவறவிட்டார்.

1991ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் ஆண்களுக்கான 4 x 400 அஞ்சலோட்டப் போட்டியில் பங்குபற்றி வந்த இலங்கை அணி, முதற்தடவையாக இம்முறை போட்டிகளில் இருந்து விலகியுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இலங்கையின் மற்றுமொரு நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரரான சுரன்ஜய டி சில்வா, கடந்த மாதம் நடைபெற்ற முதலாவது கட்ட தகுதிகாண் போட்டிகளில் பங்குபற்றி ஆண்களுக்கான 100 மீற்றரில் ஹிமாஷ ஏஷானுக்கு பலத்த போட்டியைக் கொடுத்து இரண்டாவது இடத்தைப்பெற்று ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்குபற்றும் வாய்ப்பைப் பெற்றுக்கொண்டார். அதன்பிறகு கையில் ஏற்பட்ட திடீர் காயத்தினால் சுரன்ஜயவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரண்டாவது தகுதிகாண் போட்டிகளில் பங்குபற்ற முடியாமல் போனது.

இது இவ்வாறிருக்க, தனது உடற்தகுதியை நிரூபித்தால் மாத்திரமே சுரன்ஜயவை ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்குபற்றச் செய்ய முடியும் என்ற நிபந்தனையுடன் இலங்கைக் குழாத்தில் அவரை இணைத்துக்கொள்ள இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பெண்கள் அணியில் 800 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் ஆசிய உள்ளக மெய்வல்லுனர் சம்பியனான கயந்திகா அபேரட்ன மற்றும் ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் நடப்புச் சம்பியனான நிமாலி லியனாரச்சி ஆகியோர் பதக்கங்களைப் பெற்றுக்கொடுக்கின்ற முன்னிலை வீராங்கனைகளாக இடம்பெற்றுள்ளனர்.

கடந்த மாதம் நடைபெற்ற முதலாவது தகுதிகாண் போட்டியில் பெண்களுக்கான 3000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளுக்கான அடைவு மட்டத்தினைப் பூர்த்தி செய்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட நிலானி ரத்னாயக்கவும், இம்முறை ஆசிய மெய்வல்லுனர் குழாத்தில் இடம்பெற்றுள்ளார்.

இம்முறை ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்கேற்பதற்கான அடைவு மட்டத்தினை பூர்த்தி செய்த 16 பேர் கொண்ட இறுதிக் அணியை விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதிக்காக தேசிய மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Thu, 03/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை