இரண்டாவது தடவையாகவும் நடைபெற்ற சிறுவர்களுக்கான கால்பந்து களியாட்ட திருவிழா

இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் உள்ளூர் கால்பந்து அகடமிகளுக்கிடையில் 2ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட

12 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கான கால்பந்து களியாட்ட திருவிழாவில் மாவனல்லை செசெக்ஸ், அம்பாறை செடா, ட்ரெவலர் அகடமி கம்பளை, நீர்கொழும்பு லிவர்பூல் மற்றும் அநுராதபுரம் சொலிட் உள்ளிட்ட கால்பந்து அகடமிகள் அதிக கௌரவங்களைப் பெற்றுக்கொண்டது.

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் அநுர டி சில்வாவின் எண்ணக்கருவுக்கு அமைய கால்பந்து விளையாட்டின் மூலமாக சிறுவர்கள் மத்தியில் ஒற்றுமை, மகிழ்ச்சி மற்றும் போட்டித் தன்மையை ஏற்படுத்தும் நோக்கில் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தொழில்நுட்ப பிரிவினால் 2ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட கால்பந்து களியாட்ட திருவிழா கடந்த 16ஆம் திகதி கொழும்பு சிட்டி லீக் கால்பந்து மைதானத்தில் நடைபெற்றது.

இதில் யாழ்ப்பாணம், பதுளை, அம்பாறை, மட்டக்களப்பு, கண்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 19 கால்பந்து அகடமிகள் பங்குபற்றியிருந்ததுடன், ஐந்து பிரிவுகளின் போட்டிகள் இடம்பெற்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேநேரம், இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தொழில்நுட்பப் பிரிவினால் 2ஆவது தடவையாகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட 12 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கான கால்பந்து களியாட்ட திருவிழா தொடர்பில் இலங்கை கால்பந்து சம்மேளன அகடமிகளின் முகாமையாளர் டட்லி ஸ்டெய்வோல் கருத்து வெளியிடுகையில்,

நாங்கள் 12 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கான கால்பந்து களியாட்ட திருவிழாவை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தோம். உண்மையில் இலங்கையின் கால்பந்து விளையாட்டின் எதிர்காலத்துக்கு இது மிகப் பெரிய முதலீடாக அமையும் என நான் கருதுகிறேன். இதன்மூலம் திறமையான இளம் வீரர்களை பயிற்சியாளர்களுக்கு இலகுவில் இனங்கண்டு அவர்களை தேசிய மட்டத்துக்கு கொண்டு செல்ல முடியும். மேலும், சிறுவர்களுக்கிடையில் கால்பந்து விளையாட்டை பிரபல்யப்படுத்துவதற்கும் இது மிகச் சிறந்த வாய்ப்பாக அமையும் என இளைய குழந்தைகளை கால்பந்து விளையாடுவதற்கும் சிறுவர்களிடையே அவர் தெரிவித்தார்.

எனினும், கடந்த பெப்ரவரி மாதம் இதே மைதானத்தில் நடைபெற்ற அங்குரார்ப்பண கால்பந்து களியாட்ட திருவிழாவில் நாடாளவிய ரீதியிலிருந்து 24 கால்பந்து அகடமிகள் பங்குபற்றியிருந்ததுடன், கொழும்பு, வென்னப்புவ, பாணந்துறை,வத்தளை, வேயங்கொட, நீர்கொழும்பு, கம்பஹா, களுத்துறை, பலாங்கொட மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கால்பந்து அகடமிகள் அதிக கௌரவங்களைப் பெற்றுக்கொண்டன.

பீ.எப் மொஹமட்

Thu, 03/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை