ஸ்ரீபாத தேசிய கல்வியியல் கல்லூரியில்ஆசிரியர் பயிலுநர்கள் போராட்டம்

பதிவாளர் உட்பட அதிகாரிகளை  வெளியேற்றும்வரை தொடர் பகிஷ்கரிப்பு

ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரி ஆசிரிய பயிலுநர்கள் (மாணவர்கள்) நேற்று (06) வகுப்பு பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

கல்லூரியின் காரியாலயத்தில் மது அருந்திய பதிவாளர் உள்ளிட்ட உத்தியோகஸ்தர்களை வெளியேற்றக்கோரியும் முறையாக சுத்தமான உணவு வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்துமே கல்லூரி வளாகத்தினுள் இவ் ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்துள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர்.  

ஸ்ரீபாத தேசிய கல்வியிற் கல்லூரியில் சுகாதாரம் பேணப்படாது சமையல் நடவடிக்கை மேற்கொள்வதாக பயிலுநர் மாணவர்களினால் பொதுச்சுகாதார பரிசோதகர்களுக்கு முறைப்பாடு செய்ததையடுத்து நேற்று முன்தினம் (05) கொட்டகலை மற்றும் தலவாக்கலை பொது சுகாதார பரிசோதகர் குழுவொன்று திடீர் பரிசோதனையில் ஈடுபட்டனர். 

இதன்போது சுகாதாரமற்ற நிலையில் இருந்த கல்லூரியின் சமையலறைக்கு சீல் வைத்தனர். இந் நிலையில் நேற்று முன்தினம் இரவும் நேற்று காலையும் முறையாக மாணவர்களுக்கு உணவு வழங்கவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்தனர். 

நீண்டகாலமாக கடமையாற்றும் கல்லூரியின் பதிவாளரும் சக அதிகாரிகள் இருவருமாக மூவர் நேற்று முன்தினம் இரவு காரியாலயத்தில் மது அருந்திக்கொண்டிருத்த நிலையில் மாணவர்களுக்கும் அவ் அதிகாரிகளுக்கும் முரண்பாடு ஏற்பட்டது. இதனையடுத்து திம்புள்ள பத்தனை பொலிஸார் தலையிட்டு குறித்த பதிவாளருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த பதிவாளரையும் அதிகாரிகளையும் ஸ்ரீபாத தேசிய கல்லூரியிலிருந்து வெளியேற்றும் வரையில் தொடர் வகுப்பு பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஆசிரியபயிலுநர் மாணவர்கள் தெரிவித்தனர்.     

(நோட்டன் பிரிட்ஜ் தினகரன் நிருபர்)  

Thu, 02/07/2019 - 11:58


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை