விக்கியின் ஆரம்ப ஆட்சேபனை மனுக்கள் மேல் முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிப்பு

வட மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசருமான சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் ஏனைய இருவர் மீது வடமாகாண சபை முன்னாள் அமைச்சர் பி. டெனிஸ்வரன் தாக்கல் செய்திருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விக்னேஸ்வரன் மற்றும் ஏனைய இருவராலும் எழுப்பப்பட்ட ஆரம்ப ஆட்சேபனைகளை மேல் முறையீட்டு நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.

இதன்படி முன்னாள் முதலமைச்சர் மற்றும் ஏனைய இருவர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான ஜனக டி சில்வா மற்றும் குமுதினி விக்ரமசிங்க ஆகியோர் நேற்று இந்த உத்தரவை விடுத்தனர்.

வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண உறுப்பினர்களான அனந்தி சசிதரன், கே. சிவநேசன் ஆகியோர் தன்னை வடமாகாண அமைச்சராக செயற்படுவதை வேண்டுமென்றே தடுக்க முயன்றதாகவும் இது மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை அவமதிப்பதாக உள்ளது என்றும் கூறி பி. டெனிஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

1978 அரசியலமைப்பின்படி நீதிமன்ற அவமதிப்பு செயற்பாடுகளை முன்னெடுக்கும் சட்ட அதிகாரம் உச்ச நீதிமன்றம் மற்றும் மேன் முறையீட்டு நீதிமன்றம் ஆகிய இரண்டு நீதிமன்றங்களுக்கும் உண்டு என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எதிர்வரும் பெப்ரவரி 15ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

வடமாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சராக செயற்படுவதில் இருந்து பி. டெனிஸ்வரனை நீக்குவதற்கு வடமாகாணத்தின் முன்னாள் முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானத்துக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் 2018 ஜூன் 29ம் திகதி இடைக்கால தடையொன்றை விதித்திருந்தது.

 

Thu, 02/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை