நிலையியற் கட்டளைகள் தொடர்பில் முழுமையான அறிவைப் பெற்றவர் அஸ்வர்

பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் தொடர்பில் முழுமையான அறிவைப் பெற்றிருந்த உறுப்பினராக மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் விளங்கியதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மறைந்த பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம்.அஸ்வர், சூசைதாசன் மற்றும் ஜனதாச நியதபால ஆகியோர் தொடர்பான அனுதாபப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இந்தக் கருத்தை முன்வைத்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து முடியும்வரை சபைக்குள் இருக்கும் உறுப்பினர் என்ற ரீதியில் அவரை மறக்க முடியாது. நிலையியற் கட்டளை தொடர்பில் அவர் கொண்டிருந்த அறிவு வியக்கத்தக்கது. மஹரகமவில் பிறந்து, கொழும்பு சாஹிரா கல்லூரியில் உயர்கல்வியைப் பெற்ற அவர், சாதாரணதரப் பரீட்சையை மூன்று மொழிகளிலும் எழுதி சித்திபெற்ற பெருமை அவரைச் சாரும்.

ஊடகவியலாளராக நன்கு அறியப்பட்ட அவர், சிறந்த நாடகக்கலைஞர் என்பதுடன், கிரிக்கெட் போட்டிகளை நேரடியாக வர்ணனை செய்யும் திறனையும் பெற்றிருந்தார். முஸ்லிம் சமூகத்தின் கலாசாரம் மற்றும் புத்தளம் மாவட்டத்தின் அபிவிருத்தி என்பவற்றில் அவர் கூடுதல் அக்கறை கொண்டு செயற்பட்டார்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் அவருடன் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஒருமுறை நாம் லிபியாவுக்குக் கப்பலில் சென்றபோது எமது கப்பல் சூறாவளியில் சிக்கியது. அப்போது கப்பலின் வெளிப்பகுதிக்குச் சென்று முஸ்லிம் மதப்படி இறைவழிபாட்டில் அவர் ஈடுபட்டமையை மறக்க முடியாது.

அஸ்வர் சமசமாஜ கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி போன்ற கட்சிகளில் உறுப்பினராக இருந்தபோதும் நாம் அவருக்கு அதிகமாக அன்புகாட்டியிருந்தோம். உண்மையான மனிதர் என்ற ரீதியில் அவர் மீது நாம் அன்பு கொண்டிருந்தோம் என்றார்.

இதேவேளை, மறைந்த பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம்.அஸ்வர், சூசைதாசன் ஆகியோர் தொடர்பான அனுதாபப் பிரேரணையில் தமிழ் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டு உரையாற்றினர். அமைச்சர் ஹலீம், இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சிவஞானம் சிறிதரன், ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட பலரும் கருத்துக்களை முன்வைத்தனர்.

மகேஸ்வரன் பிரசாத்

 

Sat, 02/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை