59 எம்.பிக்கள் தவறிழைத்திருப்பதாக விசாரணை ஆணைக்குழு அறிக்கை

பாராளுமன்றத்திற்குள் கடந்த நவம்பர் மாதம் 14,15,16ஆம் திகதிகளில் பாராளுமன்ற சபைக்குள் இடம்பெற்ற சம்பவங்களில் 59 பாராளுமன்ற உறுப்பினர்கள் தவறிழைத்திருப்பதாக விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த 54 பாராளுமன்ற உறுப்பினர்களும், ஐ.தே.கவைச் சேர்ந்த 4 உறுப்பினர்களும், ஜே.வி.பியின் ஒருவரும் இவ்வாறு தவறிழைத்திருப்பதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாராளுமன்ற நிலையியற்கட்டளை 77 இன் கீழ் தவறிழைத்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பொலிஸ் திணைக்களம், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் என்பவற்றினால் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற சுயாதீன விசாரணைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து, அவற்றை விரைவில் பூர்த்திசெய்து சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்கு அமைய நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுப்பது அவசியமாகும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 14, 15,16ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்ப சம்பவங்கள் குறித்து விசாரிப்பதற்காக பிரதி சாபாநாயகர் தலைமையில் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவே இந்தப் பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

தவறிழைத்த பாராளுமன்ற உறுப்பினர்களாக

எஸ்.பி. திசாநாயக்க, ஆனந்த அளுத்கமகே, பிரசன்ன ரணவீர, பியல் நிஷாந்த, பத்ம உதயசாந்த, டிலான் பெரேரா, தினேஷ் குணவர்தன, லொஹான் ரத்வத்த, ஜயந்த சமரவீர, ரோஹித அபேகுணவர்தன, திலங்க சுமதிபால, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, திலும் அமுனுகம, இந்திக அனுருத்த, சிசிர ஜெயக்கொடி, காஞ்சன விஜய சேகர, பிரியங்கர ஜயரட்ண, சுசந்த புஞ்சிநிலமே, பவித்ரா வன்னியாராச்சி, மஹிந்தானந்த அளுத்கமகே, ரஞ்சித் சொய்சா, எஸ்.எம்.சந்திரசேன, டி.பி சானக, அருந்திக பெர்னாண்டோ, டளஸ் அழகபெரும, விமலவீர திசாநாயக்க, ஷெஹான் சேமசிங்க, தேனுக்க விதானகமகே, அனுராத ஜெயரத்ன, சாரரதி துஸ்மந்த, சனத் நிஷாந்த, நிமல் லான்ஸா, விஜித பேருகொட, சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, ஜனக பண்டார, ரொமேஷ் பத்திரன, மொஹான் பிரியதர்ஷன, ரோஷன் ரணசிங்க, வாசுதேவ நாணயக்கார, சி.பி. ரத்நாயக, ரி.பி.ஏக்கநாயக, லக்ஷ்மன் யாப்பா, தாரக பாலசூரிய. லக்ஷ்மன் வசந்த பெரேரா, ஜனக பண்டார தென்னக்கோன், ஜானக்க வக்கும்புற, பந்துல குணவர்தன, நிசாந்த முதுஹெட்டிகம, சாலிந்த திசாநாயக, பிரேமலால் ஜெயசேகர, திலிப் ஆராய்ச்சி, நிரோஷன் பிரேமரத்ன, விஜித பேருகொட, பிரியங்கர ஜெயரத்ன, பாலித தெவரப்பெரும, சந்திம கமகே, ரஞ்சன் ராமநாயக்க, துஷார இந்துனில், விஜித ஹேரத் ஆகியோர் இந்த விசாரணைக் குழுவினால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சபாநாயகரை தலைமையாகக் கொண்ட பாராளுமன்றத்துக்கு அதிகாரம் இருப்பதாக சிரேஷ்ட பிரதி சொலிசிட்ட ஜெனரல் றோஹாந்த அபேசூரிய விசாரணை ஆணைக்குழுவில் தெரிவித்தாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாராளுமன்ற சட்டத்தின் அட்டவணையில் ஆ" பகுயில் காட்டப்பட்டுள்ள சரத்துக்களுக்கு அமைய பாராளுமன்றத்தினால் அல்லது உச்சநீதிமன்றத்தினால் தண்டனை விதிக்க முடியும் என்றும், இது தொடர்பில் பாராளுமன்றத்தினால் விதிக்கக் கூடிய ஆகக்கூடிய தண்டனை 28வது சரத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

சட்டத்தின் அட்டவணையில் ஆ பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள சரத்தில் குறிப்பிடப்படும் தவறுகள் தொடர்பில் உச்சநீதிமன்றத்தினால் மாத்திரம் தண்டனை விதிக்கப்பட முடியும். இதன்போது சட்டத்தின் 22, 23, 24, 25 மற்றும் 26வது விரிவுகளின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கமுடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் பதிவுசெய்யப்பட்ட கமராக் காட்சிகள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொண்ட வீடியோ காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை நடத்தியிருப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சபாநாயகரை செயற்படாவிடாமல் தடுத்தமை, சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியமை, சபாநாயகரை அச்சுறுத்தியமை, சபையில் இருந்தவர்கள் மீது புத்தகங்கள் மற்றும் போத்தல்களால் வீசியமை, சபாநாயகரின் மேசையிலிருந்த ஒலிவாங்கிக் கட்டமைப்புக்களை சேதப்படுத்தியமை போன்ற பல்வேறு தவறுகள் விசாரணை ஆணைக்குழுவினால் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்தக் குழப்ப நடவடிக்கைகளால் சபைக்கு ஏற்பட்ட சேதம் 325,000 ரூபாவாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

மகேஸ்வரன் பிரசாத்

 

 

Sat, 02/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை