வடக்கு அபிவிருத்திக்கு விசேட செயல்திட்டம்

திட்ட வரைபை வெளியிட்டார் நிதியமைச்சர் மங்கள

*பாதிக்கப்பட்ட பெண்களின் நுண்கடன்கள் இரத்து
*2018: 12,000 மில். நிதியில் 20 திட்டங்கள் முழுமை

வட மாகாணத்துக்கான பல்வேறு அபிவிருத்தி மற்றும் உதவித்திட்டங்களை உள்ளடக்கிய வடக்கு அபிவிருத்தி திட்ட வரைபை நிதி அமைச்சர் மங்கள் சமரவீர நேற்று வெளியிட்டார்.

நிதி அமைச்சில் வைத்து நேற்று பெப்ரவரி 22 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட இந்த வாரக்கூட்டத்தில் அரசாங்கம் வட மாகாணத்துக்கு கடந்த நான்கு வருடகாலம் வழங்கிய முக்கியத்துவம் பற்றி விளக்கமளிக்கப்பட்டது.

வட பகுதியை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் தரும் முக்கியத்துவம் பற்றி இலங்கைக்கு ஆதரவு தரும் நாடுகளும் கவனத்திற்கொள்ள வேண்டும் என்று நிதி அமைச்சர் அங்கு குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியின் போது அமைச்சர் வெளிநாட்டு பிரதிநிகளிடம் விளக்கமளிக்கையில்,

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட மாகாணத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக நிதி அமைச்சு கடந்த நான்கு வருடங்களாக குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தை வழங்கி வந்திருக்கிறது. இன நல்லிணக்கம், சமூகங்களுக்கு அதிகாரமளித்தல், ஒதுக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம் வழங்குதல், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வழங்கும் பொறிமுறைகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல விடயங்கள் வட மாகாணத்துக்கென நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் மேலும் கூறினார்.

“எனது 2018 வரவு செலவுத் திட்டத்தில் முதல் முறையாக வடக்குக்கு இன நல்லிணக்கம் என்ற பிரிவுக்காக 12 ஆயிரம் மில்லியன் ரூபாவுக்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டு 20 திட்டங்கள் உருவாக்கப்பட்டன. நிதி அமைச்சர் என்ற ரீதியில் நான் பல தடவை வடக்குக்கு விஜயம் செய்துள்ளேன். அத்துடன் திறைசேரியின் நிதி உதவி மூலம் செயல்படுத்தப்பட்ட  திட்டங்களின் முன்னேற்றத்தை கிரமமாக நேரடியாக பரிசீலித்து வந்திருக்கின்றேன் என நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.

கடன்பட்ட நிலை என்ற விடயம் முதலில் வடக்கு மாகாணத்திலேயே உருவானது. இதனால் ஏனைய மாகாணங்களிலும் தீவிர செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய நிலை அரசாங்கத்துக்கு ஏற்பட்டது. அத்துடன் வரட்சியினால் பாதிக்கப்பட்ட 13 மாவட்டங்களில் நாம் பெண்களின் கடன்களை அண்மையில் இரத்துச் செய்தோம். இந்த வகையில் கடந்த வாரம் வடக்குக்கு 3 நாள் விஜயமொன்றை மேற்கொண்ட பிரதமர் அங்குள்ள கடன்பட்ட பெண்களுக்கு 1,400 மில்லியன் ரூபா கடன் நிவாரணம் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்ததை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

அத்துடன் வடக்கில் சூறையாடும் நுண்கடன்களை முடிவுக்கு கொண்டுவர அரசாங்கம் 35 சதவீத வருடாந்த வட்டிவீத மேல் வரம்பை வழங்கியுள்ளது. அத்துடன் 500 மில்லியன் ரூபா வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடு, கூட்டுறவுகளுக்கான கடன் வழங்கலாகும். இது 30 ஆயிரம் குடும்பங்களை சென்றடையும். கடன் திமிங்கிலங்களிடம் செல்லாமல் குறைந்த வட்டியில் அவர்கள் சிறிய கடன்களை இதன் மூலம் பெற முடியும்.

இதற்கு மேலதிகமாக நாம் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கடன் திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். இது நாடளாவிய ரீதியில் உள்ள தொழில் வாண்மையாளர் திறன் கொண்டவர்களுக்கான குறைந்த வட்டி கடன் முறையாகும். இந்த திட்டத்துக்கு திறைசேரி கடந்த வருடம் 5,200 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது. இந்த வருடம் சுமார் 4,000 மில்லியன் ரூபா வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் கூறினார்.

இதேவேளை அண்மையில் விடுவிக்கப்பட்ட மயிலிட்டி துறைமுகம் திறைசேரியின் நிதியுதவியுடன் மீளமைக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தின் வடக்கில் உள்ள தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ள சிறிய மீனவ குடும்பங்கள் இதன் மூலம் பயன்பெறுவர். இவர்கள் நீண்டகாலம் வேறு இடங்களில் இருந்த பின்னர் அண்மையிலேயே மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ளனர். இதேநேரம் யாழ்ப்பாணத்தில் பொருளாதார மையமொன்று அமைக்கப்படுகிறது.

சிறிய விவசாயிகள் தமது உற்பத்திகளுக்கு நல்ல விலையைப் பெற இது உதவும். அதேநேரம் கிளிநொச்சியில் விவசாயிகள் தமது அறுவடைகளை சேகரித்து வைக்க 250 மில்லியன் ரூபா செலவில் களஞ்சியசாலையொன்றை நாம் கடந்த வருடம் நிர்மாணித்திருந்தோம். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வட பகுதி மக்களுக்கு அரசாங்கத்தின் நிதி உதவியில் நாம் நடைமுறைப்படுத்தும் சில திட்டங்களில் இவை ஒரு சில மாத்திரமே.

எமது பிரதான துரித கிராமப்புற அபிவிருத்தி திட்டமான கம்பெரலிய திட்டம் வடக்கிலும் செயற்படுத்தப்படுகிறது. யாழ்ப்பாணம் மற்றும் வன்னி தேர்தல் மாவட்டங்கள் மாத்திரம் இத்திட்டத்தின் கீழ் 5,000 மில்லியன் ரூபாவிலான திட்டங்கள் மூலம் பயன்பெறும்.

கம்பெரலிய திட்டத்தின் வட பகுதி வெற்றியானது எமது அபிவிருத்தி திட்டங்கள் வட பகுதி மக்களுக்கு எவ்வளவு பயன்தருகின்றன என்பதை வெளிப்படுத்துகின்றன.

அதேவேளை இதுபோன்று எதிர்வரும் வரவு - செலவு திட்டத்திலும் எதிர்கால அபிவிருத்தி கொள்கைகளிலும் வடக்கை கட்டியெழுப்பும் திட்டங்கள் தொடரும் என்று உறுதியாக கூறமுடியும்.

அத்துடன் வடக்கை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் தரும் முக்கியத்துவம் பற்றி இலங்கையை ஆதரிக்கும் பல்வேறு உதவி வழங்குவோர் கவனத்திற்கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன் என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர கூறினார்.

 

Sat, 02/23/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக