கோட்டாவின் மேன்முறையீடு நிராகரிப்பு

டி.ஏ. ராஜபக்ஷ நூதனசாலை தொடர்பிலான ஆட்சேபனை மனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்காக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஆறுபேரினால் முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டு மனு கொழும்பு விசேட நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கை விசாரிப்பதற்கு கொழும்பு விசேட நீதிமன்றத்துக்கு நியாயாதிக்கம் இல்லையெனக்கூறி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஆறு பேர் முன்வைத்திருந்த ஆட்சேபனை மனு பெப்ரவரி 11 ஆம் திகதி கொழும்பு விசேட நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் ஏழு சந்தேக நபர்களாலும் முன்வைக்கப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவை நிராகரிக்க நீதிமன்றம் தீர்மானித்திருப்பதாக கொழும்பு விசேட நீதிமன்ற நீதிபதிகளான சம்பத் அபேகோன்(தலைவர்), சம்பத் விஜேரட்ன மற்றும் சம்பா ஜானக்கி ராஜரட்ன ஆகிய மூவரும் நேற்று அறிவித்தனர்.

இதேவேளை ஆறாவது சந்தேக நபரான தேவகே மஹிந்த சாளிய நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகாததுடன் அவர் சத்திரசிகிச்சைக்கு உள்ளாகியிருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. எவ்வாறாயினும் அவரது உடல்நிலை பற்றிய மருத்துவ அறிக்கையை மார்ச் 01 ஆம் திகதியன்று சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் அரசாங்க சட்டத்தரணிக்கு அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து இவ் வழக்கு எதிர்வரும் மார்ச் 01 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென அறிவிக்கப்பட்டது.

கடந்த அரசாங்கத்தில் மெதமுலனையில் டி. ஏ. ராஜபக்ஷ ஞாபகார்த்த அருங்காட்சியகம் நிர்மாணிப்பது தொடர்பில் காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான 33.9 மில்லியன் ரூபாவை செலவிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கோட்டாபய ராஜபக்ஷ உட்பட பிரதிவாதிகளுக்கு எதிராக பொது வழங்கல் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுதாபனத்தின் முன்னாள் தலைவர் பிரசாத் ஹர்சன டி சில்வா, முன்னாள் பொது முகாமையாளர் பத்ரா உதுலாவத்தி கமலதாச மற்றும் முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினர்களான சுதம்மிக்கா கெமிந்த ஆர்டிகல,சமன் குமார ஆப்ரஹாம் கலபத்தி,தேவகே மஹிந்த சாலிய மற்றும் சிறிமதி மல்லிகா குமாரி சேனாதீர ஆகியோரே கூட்டுதாபனத்துக்கு சொந்தமான பணத்தை மோசடி செய்திருப்பதாக இவ்வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி வரையான காலப்பகுதிக்குள் காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுதாபனத்தின் நிர்மாணப்பணிகளுக்காக 33.9 மில்லியன் ரூபா நிதியும் இரண்டாம் கட்டமாக 2014 ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி வரையான காலப்பகுதிக்குள் 5.98 மில்லியன் ரூபா நிதியும் செலவிடப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Sat, 02/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை