தமிழ் மக்களின் இராஜதந்திர நகர்வுகளுக்கு இன்னமும் காலம் கடந்துவிடவில்லை

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இராஜதந்திரிகளுடன் பேச்சுக்களை நடத்தி அடுத்த கட்டத்துக்கான நகர்வுகளை மேற்கொள்ள முடியும். இதற்கான காலம் இன்னமும் கடந்துவிடவில்லையென ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். 

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கம் மேலும் 2 வருடங்கள் அவகாசம் பெற்றுக் கொள்ளும் நிலையே காணப்படுகிறது. இதனைத் தடுப்பதற்கு கூட்டமைப்பு நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்றும் அவர் கூறினார். 

யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் இதனைக் குறிப்பிட்டார்.

மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மாத்திரமே இருப்பதால், அவர்கள் இராஜதந்திர ரீதியில் பேச்சுகளை நடத்தி உரிய அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும். 

இலங்கை சர்வதேசத்துக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற மேலும் இரண்டு வருட கால அவகாசத்தைக் கொடுக்கக்கூடாது என்றே பல தரப்பினரும் கூறி வருகின்றனர். இந்த அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டுமென்றே சர்வதேச நாடுகளும் முயற்சிக்கின்றன. இவ்வாறான நிலையில் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் ஏனையோரையும் ஒன்றிணைத்து, ஒரு தெளிவான முடிவை எடுத்து அதனை இராஜதந்திர மார்க்கத்தின் ஊடாக சர்வதேசத்துக்கு அறிவிக்க வேண்டும். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அதனைச் செய்யவில்லை. 

தற்போது, இராஜதந்திரிகளுக்கு இரண்டு மாற்று வழிகள் உள்ளன. ஒன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு சொல்கின்ற விடயம். மற்றையது ஏனையோர் சொல்கின்ற விடயம். மக்களால் தெரிவு செய்யப்பட்ட 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஏனையோரையும் இணைத்து ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்து, அந்த கலந்துரையாடலில் ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும். இதனையே தமிழ் மக்களும் எதிர்பார்க்கின்றனர்.  

தமிழ் மக்களின் சார்பில் முடிவொன்றை எடுத்து அதனை கனடாவிற்கும், பிரித்தானியாவிற்கும், ஏனைய சர்வதேச நாடுகளுக்கும் இராஜதந்திர ரீதியில் தெரியப்படுத்தியிருந்தால், நிலைமைகளை மாற்றியிருக்க முடியும். தற்போதும் காலம் கடந்துவிடவில்லை. கூட்டமைப்பினால் அதனைச் செய்ய முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

(யாழ்ப்பாணம் குறூப் நிருபர்)

Tue, 02/19/2019 - 10:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை