தேசிய அரசு அமைக்கும் முயற்சியில் தொடர்ந்தும் ஐக்கிய தேசிய கட்சி

பிரதமர் தலைமையில் நாளை முக்கிய கூட்டம்  

தேசிய அரசாங்கத்தை அமைக்கும் முயற்சி இன்னும் கைவிடப்படவில்லை எனத் தெரிவித்த அரச தொழில் முயற்சி, கண்டி மரபுரிமைகள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சரும் சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல, இவ்விடயம் தொடர்பில் நாளை (20)பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் முக்கிய சந்திப்பு இடம்பெறவிருப்பதாகவும் தெரிவித்தார். ஆரம்பத்தில் தேசிய அரசாங்கம் அமைக்கும் திட்டத்துக்கு சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலர் எமக்கு பூரண ஆதரவை வழங்கமுன்வந்திருந்த நிலையில் அக்கட்சியின் உயர் மட்டம் எடுத்த முடிவு காரணமாக திட்டத்தை பிற்போட வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவித்த அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, தற்போது அந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட மற்றும் பலர் ஒருமித்த இணக்கப்பாட்டுக்கு வந்திருப்பதால், நாளை பிரதமருடன் இடம்பெறும் சந்திப்பை அடுத்து அவரது ஆலோசனைக்கமைய அடுத்தகட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படவிருப்பதாகவும் கூறினார்.  

அன்றயை தினம் இடம்பெறவிருக்கும் கட்சித் தலைவர் கூட்டத்தின் போது இவ்விடயம் தொடர்பாக பேசவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.   

அரசாங்கத்தின் பதவிக்காலம் இன்னும் ஒரு வருடத்துக்கு சற்றுக் கூடுதலாகவே காணப்படுவதால் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை இக்காலப் பகுதிக்குள் செய்து முடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதால், அமைச்சரவையின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டியுள்ளது.

இது குறித்து அரசுக்கு ஆதரவளிக்கும் சக்திகளை அரவணைத்து தேசிய அரசாங்கத்தை அமைப்பதில் அரசு தீவிரம் காட்டி வருவதாகவும் 20 ஆம் திகதியன்றோ அதற்கடுத்த தினங்களிலோ தேசிய அரசு யோசனையை சபையில் சமர்ப்பிக்க எண்ணி இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

(எம்.ஏ.எம். நிலாம்)

Tue, 02/19/2019 - 09:45


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை