சமுர்த்தி கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க த.மு.கூ. அழுத்தம் கொடுக்கும்

AMF

சம்பள உயர்வு விடயத்தில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து 50ரூபாய் பெற்றுக் கொடுத்தது போல் எதிர்காலத்தில் எங்களுடைய தொழிலாளர்களுக்கும் அரசாங்கம் ஏனையவர்களுக்கு வழங்குகின்ற மானியத்தையும், சமுர்த்தி கொடுப்பனவையும் பெற்றுக்கொடுக்க தமிழ் முற்போக்கு கூட்டணி அழுத்தம் கொடுக்கும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித்தலைவருமான விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற தொழிற்சங்கங்கள் இணைந்து ஏற்பாடு செய்த வரவு-செலவுத் திட்டத்தின் மூலமாகஅரசாங்கத்தினால்வழங்கப்படவுள்ள ஐம்பது ரூபாய் சம்பள அதிகரிப்பு தொடர்பாகவிளக்கமளிக்கும் கூட்டம் இன்று (17) ஹட்டன் டி.கே.டபிள்யு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர்அங்குமேலும் தெரிவித்ததாவது;

அரசாங்கம் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பாக முதல் முறையாக வரவு-செலவுத் திட்டத்தில் ஒரு தொகையை அதிகரிப்பதற்கு தீர்மானித்திருக்கின்றது. அதற்கு காரணம் தமிழ் முற்போக்கு கூட்டணி அரசாங்கத்திற்கு கொடுத்த அழுத்தம் என்பதை யாரும் மறுக்க முடியாது. இது ஒரு சிறிய தொகையாக இருந்தாலும் கூட எதிர்காலத்தில் இந்த விடயத்தில் அதாவது அரசாங்கம் ஏனையவர்களுக்கு வழங்குகின்ற சமுர்த்தி கொடுப்பனவுகள்,மானியங்கள் என்பவற்றை பெற்றுக் கொள்வதற்கு இது ஒரு ஆரம்பமாகவே இருக்கும்.

இதுவரை காலமும் தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்பு அது தொடர்பாக எந்தவிதமான எதிர்ப்புகளும் அல்லது அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தையோ நடைபெறுவது இல்லை. ஆனால் இந்த முறை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து மேலதிகமாக 50ரூபாயை தமிழ் முற்போக்கு கூட்டணி பெற்றுக் கொடுத்திருக்கிறது.இது எங்களுக்கு கிடைத்த வெற்றியாக நாங்கள் கருதவில்லை. ஆனால் இதன் ஊடாக எதிர்காலத்தில் அரசாங்கத்துக்கு அழுத்தங்களை கொடுத்து ஏனையவர்களுக்கு அரசாங்கம் வழங்குகின்ற அனைத்து சலுகைகளையும் எங்களுடைய மக்களும் பெற்றுக் கொள்ளக்கூடிய ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. அதற்கான அழுத்தத்தையும் நாங்கள் கொடுப்பதற்கு தயாராக இருக்கின்றோம்

நாங்கள் முற்போக்கு கூட்டணி என்ற வகையில் அரசாங்கத்தோடு இருக்கின்றோம் என்பதற்காக எல்லாவற்றையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். எங்கள் மக்களுக்கும் எது தேவையோ எது சரி என்று படுகின்றதோ அதற்காக நாங்கள் எப்பொழுதும் குரல் கொடுக்க தயங்க மாட்டோம். அதனை கடந்த காலங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணி செய்து காட்டி இருக்கின்றது.

எதிர்காலத்தில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் தாங்கள் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்க முடியாது என்பதை நாம் இந்த முறை அவர்களுக்கு உணர்த்தி இருக்கின்றோம். எனவே எங்களுடைய மக்கள் தொடர்பான பிரச்சினைகளை மக்களோடு பேசி அல்லது மலையகத்தில் பிரதிநிதித்துவம் செய்கின்ற அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி ஒரு தீர்மானத்திற்கு வர வேண்டும் என்பதை இந்த முறை கூட்டு ஒப்பந்தத்தின் மூலமாக கொடுக்கப்பட்ட அழுத்தத்தில் தெளிவாக தெரிகின்றது. எனவே எதிர்காலத்திலும் அந்த அழுத்தங்களை கொடுப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி என்றும் பின்னிற்காது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(ஹட்டன் சுழற்சி நிருபர் - ஜீ.கே. கிருஷாந்தன்)

Sun, 02/17/2019 - 15:58


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை