“அமெரிக்காவால் எம்மை வீழ்த்த முடியாது”: ஹுவாயி நிறுவனர்

ஹுவாயி நிறுவனத்தை அமெரிக்காவால் வீழ்த்த முடியாது என்று அந்த நிறுவனத்தின் தலைவர் ரென் செங்பெய் குறிப்பிட்டுள்ளார்.

தனது மகளான நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங் வென்சு கனடாவில் கைது செய்யப்பட்டது அரசியல் நோக்கம் கொண்டது என்று பி.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் செங்பெய் குறிப்பிட்டார்.

ஹுவாயி நிறுவனம் மற்றும் வென்சு மீது பணச் சலவை, வங்கி மோசடி மற்றும் வர்த்தக ரகசியங்களை திருடியது உட்பட அமெரிக்கா குற்றவியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.

ஹுவாயி இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.

இந்த சம்பவங்களுக்கு பின்னர் முதல் முறை பேட்டி அளித்திருக்கும் செங்பெய், “அமெரிக்கா எம்மை வீழ்த்த முடியுமான எந்த வழியும் இல்லை” என்று குறிப்பிட்டார். நாம் அதிகம் முன்னேற்றம் கண்டிருப்பதால் உலகம் எம்மை கைவிடாது என்று அவர் கூறினார்.

தமது கூட்டணி நாடுகள் ஹுவாயி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ கடந்த வாரம் எச்சரித்திருந்தார். அவ்வாறான நாடுகளுடன் அமெரிக்கா நட்புக் கொள்வது கடிமாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.

சீனாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனமாக ஹுவாயி அந்நாட்டு அரசுடன் தொடர்புகளை கொண்டிருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இதனால் அந்த நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை சீன பாதுகாப்பு சேவைகள் உளவு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தக் கூடும் என அமெரிக்கா மற்றும் சில நாடுகள் அச்சம் வெளியிட்டுள்ளன.

Wed, 02/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை