அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு எதிராக 16 மாநிலங்கள் வழக்கு

மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்ப நிதி திரட்டுவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அவசரகால பிரகடன முடிவுக்கு எதிராக கலிபோர்னியா தலைமையில் அமெரிக்காவின் 16 மாநிலங்கள் வழக்குத் தொடுத்துள்ளன.

இந்த சுவர் எழுப்புவதற்கு 5.7 பல்லியன் டொலர் நிதிக்கு அமெரிக்க பாராளுமன்றம் ஒப்புதல் அளிக்க மறுத்ததை அடுத்தே கடந்த வெள்ளிக்கிழமை டிரம்ப் இந்த பிரகடனத்தை வெளியிட்டார்.

டிரம்ப் ஜனாதிபதி அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக கூறியே இதனை தடுக்க முயற்சிப்பதாக குறித்த மாநிலங்கள் குறிப்பிட்டுள்ளன.

டிரம்பின் இந்த தடுப்பு சுவர் திட்டத்தை ஜனநாயக கட்சியினர் எதிர்த்து வருவதோடு, அவரது திட்டத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

அமெரிக்காவில் மற்றொரு பகுதி அளவு அரச முடக்கம் ஏற்படுவதை தவிர்க்கும் சட்டமூலத்தில் கைச்சாத்திட்ட பின்னரே டிரம்ப் இந்த அவசரகால பிரகடனத்தை வெளியிட்டார். அவர் கைச்சாத்திட்ட சட்டமூலத்தில் சுவர் எழுப்புவதற்கு 1.375 பில்லியன் டொலர் மாத்திரமே டிரம்புக்கு கிடைக்கிறது.

தாம் அவசர நிலையை பிரகடனம் செய்ய தேவையில்லை என்றபோதும் விரைவாக நிதியை பெறுவதற்காகவே அதனை செய்ததாக குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த அறிவிப்பு சட்டரீதியான வாதத்தில் அவரது தரப்பை பலவீனப்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை பதிவு செய்யப்பட்ட வழங்கில், சுவர் எழுப்புவதற்கு அவசர நிலையை பிரகடனம் செய்த டிரம்பின் செயற்பாட்டை நிறுத்தும் படி கோரப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தின் மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிதியை திருப்புவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்றும் அதில் வாதிடப்பட்டுள்ளது.

நியூயோர்க், கலிபோர்னியா, மிச்சிகன் உள்ளிட்ட மாநிலங்கள் சான் பிரான்சிஸ்கோ மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கை தொடுத்துள்ளன.

ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின்போது மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவதற்கு டிரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார்.

குற்றங்களையும், சட்டவிரோத போதைப்பொருட்களையும் தடுக்க அந்த எல்லைச்சுவர் அவசியம் என்று டிரம்ப் கூறுகிறார்.

Wed, 02/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை