வட மாகாணத்தில் இன்று ஹர்த்தாலுக்கு அழைப்பு

யுத்தத்தில் காணாமல்போனோரின் உறவுகள் ஏற்பாடு செய்துள்ள கவனயீர்ப்பு போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கி வடக்கில் இன்று பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள் கட்சி பேதமின்றி ஒத்துழைப்பு வழங்குவதாக அறிவித்துள்ளன. 

அரசியல் கட்சிகள் மாத்திரமன்றி, தொழிற் சங்கங்கள், போக்குவரத்துத் துறையினர், வர்த்தகர்கள் என பலதுறைப்பட்டவர்களும் ஆதரவை வழங்க முன்வந்துள்ளனர். காணாமல் போனவர்களின் உறவினர் ஆரம்பித்த போராட்டம் ஏறத்தாழ இரண்டு வருடங்களை எட்டும் நிலையில் இன்றைய தினம்(25) கிளிநொச்சி கந்தசாமி ஆலயத்துக்கு முன்னால் கவனயீர்ப்புப் பேரணியொன்றும் நடைபெறவுள்ளது.இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் இந்தப் பேரணி ஏ-9 வீதியூடாகச் சென்று ஐ.நா கிளை அலுவலகத்தில் மகஜரும் கையளிக்கப்படும். 

இதனை முன்னிட்டு வடமாகாணத்தில் முழுமையான கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கட்சி எனப் பல்வேறு அரசியல் கட்சிகளும் தமக்கிடையிலான வித்தியாசத்தை மறந்து முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளன.  

எழுக தமிழ் மாநாட்டுக்கு வழங்கிய ஆதரவைப் போன்று இந்த ஹர்த்தாலுக்கும் ஆதரவு வழங்குமாறு வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். 

இன்றைய ஹர்த்தாலுக்கு ஆசிரியர் சங்கமும் அழைப்புவிடுத்திருப்பதால் பாடசாலைகளும் இயங்காதென எதிர்பார்க்கப்படுகிறது.

(மகேஸ்வரன் பிரசாத்)  

Mon, 02/25/2019 - 10:39


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை