கோத்தாவின் ஆட்சேபனை விசேட நீதிமன்றத்தால் நேற்று நிராகரிப்பு

டி.ஏ ராஜபக்‌ஷ நூதனசாலை தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷமற்றும் ஆறுபேர் முன்வைத்திருந்த ஆட்சேபனை மனுவை நிராகரிப்பதென கொழும்பு விசேட நீதிமன்றம் நேற்று தீர்மானித்தது.

கொழும்பு விசேட நீதிமன்றத்தின் நீதிபதிகளான சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜேரட்ன,சம்பா ஜானக்கி ராஜரட்ன ஆகிய மூவரே நேற்று இத்தீர்மானத்தை மேற்கொண்டனர்.

மேலும் நீதித்துறையின் 2018 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க சட்டத்துக்கமைய கொழும்பு விசேட நீதிமன்றம் ஸ்தாபிக்கப் பட்டிருப்பதாகவும் பிரதம நீதியரசரின் அனுமதியுடனேயே இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பததையும் சுட்டிக்காட்டிய விசேட நீதிமன்றம், நீதித்துறை சட்டதிட்டங்களுக்கமைய பிரதம நீதியரசரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றை எந்தவொரு காரணத்துக் காகவும் நிராகரிக்க முடியாதென்றும் அறிவித்தது.

டி.ஏ ராஜபக்‌ஷ நூதனசாலை தொடர்பான வழக்கை விசாரிப்பதற்கு கொழும்பு விசேட நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லையெனத் தெரிவித்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷஇரண்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தார்.

முன்னொரு சந்தர்ப்பத்தில் கோத்தாபய ராஜபக்‌ஷ சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, கொழும்பு விசேட நீதிமன்றம் நீதித்துறை சட்டங்களுக்கமைய ஸ்தாபிக்கப்படாததால் இவ்வழக்கை விசாரணை செய்வதற்கு விசேட நீதிமன்றத்துக்கு நியாயாதிக்கம் இல்லையென தெரிவித்திருந்தார். அத்துடன் பாரிய நிதி மற்றும் ஊழல் மோசடிகளை விசாரிப்பதற்காகவே விசேட நீதிமன்றம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதால் இவ்வழக்கு இந் நீதிமன்றத்தின் கீழ் விசாரணை செய்யப்பட முடியாதென்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இதற்கமைய மேற்படி வழக்கை விசாரணை செய்வதற்கு நீதிமன்றத்துக்கு உள்ள அதிகாரம் தொடர்பிலான தீர்மானத்தை வழங்க முடியாதென மூவரடங்கிய விசேட உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழு தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளதுடன் பிரதிவாதிகளால் முன்வைக்கப்பட்டுள்ள அடிப்படை எதிர்ப்பை நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் மேற்படி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது வழக்கின் ஆறாவது பிரதிவாதியான மகிந்த சாலிய நீதிமன்றத்தில் சமூகமளித்திருக்க வில்லை. அவர் சார்பில் ஆஜரான சட்டத்தர ணி, அவர் சுகயீனமுற்று ஆஸ்பத்திரியில் இருப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதிகள் குழாம் இவ்வழக்கை எதிர்வரும் 22ம் திகதிக்கு ஒத்தி வைத்தது.

நேற்றைய தினம் மேற்படி வழக்கு விசாரணை ஆரம்பமான போது வழக்கின் முதலாவது பிரதிவாதியான முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ சுமார் 10 நிமிடங்களுக்குப் பின்னரே நீதிமன்றத்துக்கு சமூகமளித்திருந்தார்.

இதேவேளை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபஷவை நேரத்துக்கு சமூகமளிக்குமாறும் நேற்று நீதிமன்றம் அறிவுறுத்தல் விடுத்தது. நீதிமன்ற அமர்வுகள் நேற்று காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டபோதும் கோத்தாபய ராஜபஷ சுமார் 10 நிமிடங்கள் தாமதமாகியே நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

அவரது கோரிக்கைக்கு அமைய கொழும்பு விசேட நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளடங்கிய குழுவும் வழக்கு ஆரம்பிக்கும் நேரத்துக்கு நீதிமன்றத்தில் சமூகமளிக்குமாறு கோத்தாபய ராஜபஷவுக்கு அறிவுரை வழங்கினர்.

இதற்கு முன்னொரு சந்தர்ப்பத்திலும் அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்துக்கு சமூகமளிக்க தாமதமாகியிருந்ததை சுட்டிக்காட்டிய பிரதிவாதியின் சட்டத்தரணி, தனது வாதியான கோத்தாபய ராஜபஷவை இவ்வழக்கிலிருந்து விடுவிக்குமாறு நீதிபதிகளிடம் கூறியதை நேற்று நினைவுகூர்ந்த நிலையிலேயே பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப்ப பீரிஸ் நீதிமன்றத்தில் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

இதனை கவனத்திற் கொண்ட நீதிபதிகள் குழாம் கோத்தாபய ராஜபஷவை நேரத்துக்கு சமூகமளிக்குமாறு நேற்று அறிவுறுத்தினர்.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மெதமுலனையில் டி. ஏ. ராஜபக்ஷ ஞாபகார்த்த அருங்காட்சியகம் நிர்மாணிப்பது தொடர்பில் காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான 33.9 மில்லியன் ரூபாவை செலவிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கோத்தாபய ராஜபக்ஷ உட்பட பிரதிவாதிகளுக்கு எதிராக பொது வளங்கள் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுதாபனத்தின் முன்னாள் தலைவர் பிரசாத் ஹர்சன டி சில்வா, முன்னாள் பொது முகாமையாளர் பத்ரா உதுலாவத்தி கமலதாச மற்றும் முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினர்களான சுதம்மிக்கா கெமிந்த ஆர்டிகல, சமன் குமார ஆப்ரஹாம் கலபத்தி, தேவகே மஹிந்த சாலிய மற்றும் சிறிமதி மல்லிகா குமாரி சேனாதீர ஆகியோரே கூட்டுதாபனத்துக்கு சொந்தமான பணத்தை மோசடி செய்திருப்பதாக இவ்வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி வரையான காலப்பகுதிக்குள் காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுதாபனத்தின் நிர்மாணப்பணிகளுக்காக 33.9 மில்லியன் ரூபா நிதியும் இரண்டாம் கட்டமாக 2014 ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி வரையான காலப்பகுதிக்குள் 5.98 மில்லியன் ரூபா நிதியும் செலவிடப்பட்டிருப்பதாக அக்குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Tue, 02/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை