துப்பாக்கியை காண்பித்து தாக்கிய கான்ஸ்டபிள் பணி நீக்கம்

துப்பாக்கியை காண்பித்து தாக்கிய கான்ஸ்டபிள் பணி நீக்கம்-Minuwangoda-Constable-with-Pistol-Threat-CCTV

மினுவாங்கொடை – நில்பனாகொட பிரதேசத்தில் விபத்தொன்றின் பின்னர், குடிபோதையில் மூவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். 

மினுவாங்கொடை, நில்பனாகொடை பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் இரவு 9மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.  விபத்துக்குள்ளான மோட்டார்சைக்கிளில் பயணித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் தனது துப்பாக்கியை காண்பித்து இளைஞர்களை அச்சுறுத்தி தாக்குதல் நடத்தியுள்ளார். 

விபத்து நடந்த இடத்தில் தாக்குதல் நடத்திய அவர் அருகிலுள்ள வாகன திருத்துமிடமொன்றுக்குக்குள் நுழைந்து அங்கிருந்த ஒருவரையும் தாக்கியுள்ளார். கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் குறித்த பொலிஸ் அதிகாரி பின்னர் கைது செய்யப்பட்டார்.

அவர் வைத்திருந்த ஆயுதத்தை பொலிஸார் கைப்பற்றவில்லை எனத் தெரிவித்து, மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஊர்மக்கள் திரண்டு கோசமெழுப்பியதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.  

இந்த சம்பவத்தில் காயமடைந்த மூவர் மினுவாங்கொடை கிராமிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சந்தேகநபர் நேற்று மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Tue, 02/12/2019 - 10:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை