நிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிராந்திய மாநாடு ​

நிலைபேறான சுகநலப் பாதுகாப்பு தொடர்பான சார்க் பிராந்திய மூன்று நாள் மாநாடு கல்கிஸ்சை பேர்ஜயா ஹோட்டலில் எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.  

நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலும் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன, அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இம்மாநாடு நடைபெறவுள்ளது. 

இம்மாதம் 21ஆம் திகதி முதல் 23ஆம் திகதிவரை மூன்று நாட்களுக்கு நான்கு முக்கிய அரங்குகளாக நடைபெறவுள்ள இந்த மாநாட்டை நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சின் கீழ் செயல்படும் பிராந்திய சுகநலப் பாதுகாப்புக்கான மத்திய நிலையம் ஏற்பாடு செய்துள்ளது.  

பிராந்திய நாடுகளின் சுகநலப் பாதுகாப்புப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல், இத்துறையில் சிறந்த அனுபவங்களையும், வழிமுறைகளையும் பகிர்ந்துகொள்ளல், அங்கத்துவ நாடுகளின் உயர்மட்ட ஆட்சியாளர்களின் இத்துறையில் கூடிய கவனத்தை ஈர்த்தல் முதலான நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இம்மாநாடு நடத்தப்படவுள்ளது.   இம்மாநாட்டில் பங்களாதேஷ், பூட்டான், மாலைதீவு, இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய உறுப்பு நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். 

Sat, 02/16/2019 - 13:30


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை