நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதே ஜே.வி.பியின் குறிக்கோள்

 

'அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு 225 பேரும் போதாது' என்கிறார் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க.

ஓர் உறுப்பினர் கொண்ட கட்சியை இணைத்துக்கொண்டு அமைச்சர்களின் எண்ணிக்கையை எவ்வாறு 48ஆக அதிகரிக்க முடியும்? மஹிந்த அரசு இழைத்த தவறையா இன்றைய அரசும் செய்யப் போகின்றது?

கேள்வி: -தேசிய அரசாங்கத்தை மீண்டும் உருவாக்குவதற்கு அரசாங்கம் முயற்சிப்பது தொடர்பில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடு எவ்வாறானது?

பதில்: -எமது நிலைப்பாடு மிகத் தெளிவானது. இது நாட்டைப் பற்றியோ, மக்களைப் பற்றியோ நினைத்துச் செய்யப்படும் ஒரு விடயமல்ல. இது முற்றுமுழுதாக அரசாங்கத்தின் அமைச்சுக்களின் எண்ணிக்கையினை அதிகரித்துக்கொள்வத ற்காக மேற்கொள்ளப்படும் முயற்சி மாத்திரமேயாகும். அவ்வாறில்லாமல் மக்களைப் பற்றி சிந்தித்துச் செயற்படுவதற்கு அரசாங்கத்திற்கு எந்த தேவைப்பாடும் இல்லை.

கேள்வி: -எனினும் 19வது அரசியல் யாப்புத் திருத்தத்தின் பிரகாரம் ஒரு கட்சிக்கு மேற்பட்ட கட்சிகள் ஒன்று சேர்ந்தால் தேசிய அரசாங்கமாகக் கருதி அமைச்சுக்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க முடியும். இதனடிப்படையில் இங்கு சட்டரீதியான தன்மை ஒன்றுள்ளதுதானே?

பதில்: -அரசியலமைப்புக்கு இணங்கியா இல்லையா என்பது தொடர்பிலும் பிரச்சினையுள்ளது. எனினும் அதனை விடவும் இது தார்மீக முறையின் பிரகாரமாக இவ்வாறு செய்ய முயற்சிக்கப்படுகின்றது என்பதே பிரச்சினையாகும். பெரும்பான்மையுள்ள கட்சியும், ஒரு உறுப்பினரைக் கொண்ட இன்னொரு கட்சியும் ஒன்று சேர்ந்து எவ்வாறு தேசிய அரசாங்கத்தை உருவாக்குவது?

கேள்வி: -என்றாலும் அரசியலமைப்பின் பிரகாரம் 2015ம் ஆண்டிலிருந்து கடந்த வருடம் ஒக்டோபர் வரைக்கும் ஐ.தே.கட்சி, ஸ்ரீ.ல.சு.கட்சியோடு இணைந்து உருவாக்கிய தேசிய அரசாங்கம் ஒன்றிருந்தது. கட்சியின் உறுப்பினர்களின் தொகை எப்படியிருந்தாலும் இரு கட்சிகள் இணைவதை தேசிய அரசாங்கமாக ஏற்றுக் கொள்ள முடியும்தானே?

பதில்: -தேசிய அரசாங்கத்தின் எண்ணக்கருவின் நோக்கங்களுக்கு எதிராகச் செல்வதே இங்கு நடக்கின்றது. அமைச்சர் அலிசாஹிர் மௌலானா மாத்திரம் அங்கம் வகிக்கும் கட்சியை இணைத்துக் கொண்டு அமைச்சுக்களின் எண்ணிக்கையினை 48ஆக அதிகரித்துக் கொள்வதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சியை எந்த வகையிலும் அங்கீகரிக்க முடியாது. கடந்த தேசிய அரசாங்க சமயத்தில் அமைச்சுக்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டது எப்படியிருந்தாலும் ஜனாதிபதியின் கட்சி, பிரதமரின் கட்சி என்ற வகையில் இரண்டு கட்சிகளின் அரசாங்கம் இருந்தது. அதனை நாம் தேசிய அரசாங்கமாக ஏற்றுக் கொள்ளவே வேண்டும்.

கேள்வி: -என்றாலும் முன்னர் இருந்த அரசாங்கத்தில் 60அமைச்சர்கள் இருந்தார்கள் என்று தற்போதைய அரசின் அமைச்சர்கள் சுட்டிக் காட்டியுள்ளனரே...

பதில்: -மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் அமைச்சுக்களின் எண்ணிக்கையில் எல்லை இருக்கவில்லையே! மற்றது மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் தவறுகளைச் செய்ததால்தான் மக்கள் அவர்களை வீட்டுக்கு அனுப்பினார்கள். தற்போதைய அரசாங்கமும் உதாரணமாக எடுத்துக் கொள்ள முயல்வது அவர்கள் செய்த தவறுகளையா? மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை விமர்சனம் செய்து செய்து அவர்கள் செய்தவற்றையே செய்வார்களாயின் இதில் இருக்கும் வேறுபாடுகள் என்ன?

கேள்வி: -என்றாலும் சில அமைச்சர்களுக்கு 7, 8அமைச்சுக்கள் உள்ளன. 40நிறுவனங்களுக்கு மேற்பட்டவர்களும் இருக்கின்றார்கள். இவ்வாறான நிலையில் மக்களுக்கான சேவையினைச் செய்வது சிரமமானதுதானே?

பதில்: - மக்கள் விடுதலை முன்னணியில் இணைந்திருந்த சந்திரிகா அம்மையாரின் ஆட்சியில் 20அமைச்சுக்கள் இருந்த காலமும் இருந்ததுதானே. அந்தக் காலத்திலும் இந்த அமைச்சுக்கள் இருந்தனவே! மற்றது, அமைச்சர், இராஜாங்க அமைச்சர், பிரதி அமைச்சர்கள் என 70பேரை நியமிக்க முடியும். அரசாங்கம் கூறுவதைப் போன்று பார்த்தால் அமைச்சர்களை நியமிப்பதற்கு 225உறுப்பினர்களும் போதாது போல. சுமார் 800அரச நிறுவனங்கள் உள்ளன. அமைச்சருக்கு இருப்பது எழுதுவிளைஞரின் வேலையோ, திணைக்களப் பிரதானியின் வேலையோ அல்லவே. அவரின் பணி கொள்கைகளை உருவாக்குவதுதானே. உண்ண வேண்டுமாயின் முதலையையும் உடும்பாக மாற்றும் வேலை இது.

கேள்வி: -ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமை கடந்த நாட்களில் அரசியல் பேச்சாக இருந்தது. இப்போது ஒருவரும் இதைப் பற்றி பேசுவதில்லையே...

பதில்: -ஏற்றுமதிப் பொருளாதாரம் உள்ள நாட்டிற்கு ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைவது நல்லதென 52நாள் சட்டவிரோத அரசாங்கம் உருவாக முன்னர் ஹர்ஷ த சில்வா போன்ற அமைச்சர்கள் கூறினார்கள். அப்போது அவ்வாறு ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைவது மிகவும் மோசமானது என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன கூறினார். ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைவது பாரிய பொருளாதார நெருக்கடியாகும் என சட்டவிரோத அரசாங்கம் இருந்த போது அமைச்சர் ஹர்ஷ த சில்வா கூறினார். அப்போது எந்தப் பேய் வந்தாலும் ரூபாவைக் கட்டுப்படுத்த முடியாது என பந்துல குணவர்தன கூறினார். இவர்கள் இருவரும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை வைத்துக் கொண்டு மக்களுக்கு பொய்களையே கூறினார்கள். அரசியல் நெருக்கடி இருந்த எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும். தற்போது ஓரளவுக்கு நிலையான தன்மையை அடைந்து கொண்டிருக்கின்றது. எனினும் ஒக்டோபர் 26ம் திகதிக்கு முன்னர் இருந்த நிலைக்கு இன்னமும் வரவில்லை. எவ்வாறாயினும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி எமக்கு பாதகமே தவிர, எந்த வகையிலும் அதனால் நன்மைகள் எதுவும் கிடைக்கப் போவதில்லை.

கேள்வி: -மக்கள் விடுதலை முன்னணியும் வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் முன்நிறுத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி கடந்த வாரம் கூறியிருந்தார். யார் அந்த வேட்பாளர்?

பதில்: -எமது தேவை இந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையினை ஒழிப்பதேயாகும். எல்லையற்ற அதிகாரங்களினால் நாட்டுக்குப் பாதிப்பே தவிர எந்த நன்மைகளுமில்லை. நாம் இந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையினை ஒழிப்பதற்கு கூடிய முயற்சிகளை மேற்கொள்வோம். முடியாது போனால் நாம் மக்கள் விடுதலை முன்னணியோடு தொடர்புள்ள அணிகளை இணைத்துக் கொண்டு வேட்பாளர் ஒருவரை இறக்குவோம். எமது தேவை நிறைவேற்று ஜனாதிபதி முறையினை நீக்குவதேயாகும்.

கேள்வி: -மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர் யார்?

பதில்: -பலர் இருக்கின்றார்கள். தேவையான நேரத்தில் அதனைப் பார்ப்போம்.

கேள்வி: -மாகாண சபைத் தேர்தல் தொடர்ந்து பிற்போடப்பட்டு வருகின்றதே...?

பதில்: -தற்போது அனேகமான மாகாண சபைகளின் பதவிக்காலம் நிறைவடைந்திருக்கின்றது. இன்னும் இரண்டு மாகாண சபைகளின் பதவிக் காலம் இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் முடிவடையும். அனைத்து மாகாண சபைகளின் தேர்தல்களையும் ஒரேயடியாக நடாத்துவதே எமது நிலைப்பாடாகும். எனினும் இப்போது தேவையாக இருப்பது பாராளுமன்றத் தேர்தலாகும். நாட்டிற்கு நிலையான அரசாங்கம் ஒன்று தேவை. எனினும் ஜனாதிபதியும், பிரதமரும் வீட்டின் கணவன் மனைவியைப் போல சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். கடந்த சட்டவிரோத அரசாங்க சமயத்தில் சதியினைச் செய்தவர்களும் பாராளுமன்றத் தேர்தலைக் கேட்டு ஆடினார்கள். இப்போது அதைப் பற்றி எந்தக் கதையுமில்லை.

கேள்வி: - கூடிய விரைவில் தேர்தலை நடாத்த வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் கூறுகின்றாரே...

பதில்: - தேர்தலை நடாத்த வேண்டும். அது கலப்பு முறையிலேயே தவிர கோடிக் கணக்கில் பணத்தை வீண் விரயம் செய்யும் விருப்புவாக்கு முறையில் அல்ல.

கேள்வி: -எனினும் தற்போதுள்ள குழப்பங்களுக்கு அமைய மிகவும் நடைமுறைச் சாத்தியமானது பழைய முறையில் தேர்தலை நடத்துவதே என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் கூறுகின்றாரே...

பதில்: -அவர் அவ்வாறு கருத்துத் தெரிவித்திருப்பதையிட்டு நாம் கவலையடைகின்றோம். அது மோசடிக்காரர்களுக்கு ஆதரவாக முன்வந்திருப்பதைப் போன்றதாகவே தெரிகின்றது. மாகாண சபைத் தேர்தல் கண்டிப்பாக கலப்பு முறையின் கீழேயே நடாத்தப்பட வேண்டும். குறைபாடுகள் இருப்பின் அவற்றை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டுமே தவிர விருப்புவாக்கு சண்டைகளுக்கு மீண்டும் வழி ஏற்படுத்திக் கொடுக்கக் கூடாது.

தாரக விக்ரமசேகர

Sat, 02/16/2019 - 15:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை