அரச வைத்தியசாலைகளில் நுரையீரல் மாற்று சிகிச்சை

அமைச்சர் ராஜித தெரிவிப்பு 

இலங்கையருக்கு சிறப்பான சுகாதார சேவைகளை வழங்குவதில் அர்ப்பணிப்புடன் செயற்படும் நல்லாட்சி அரசு, விரைவில் நுரையீரல் மாற்றுச் சிகிச்சை வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. சுகாதாரத் துறையில் 2,150பேருக்கு நியமனங்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில அலரிமாளிகையில் இடம்பெற்றது.

நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் ராஜித:

சுகாதார சேவையில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இலவச சுகாதார சேவைகள் இடம் பெற்றாலும் கடந்த காலங்களில் நோயாளிகளின் பணமும் செலவாகியது. புற்றுநோயாளர்களின் சிகிச்சைக்காக வழங்கப்படும் 15இலட்சம் ரூபா வரையறை நீக்கப்பட்டு, தற்போது 450  எல்லை நீக்கப்பட்டுள்ளதால் இன்று ஒரு நோயாளி 450இலட்ச ரூபாவை சிகிச்சைக்காக பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இலவசமாக ஸ்டென்ஸ், கண் வில்லைகள் பெற்றுக்கொடுப்பதன் மூலம் நோயாளிகளுக்கு பெரும் சலுகைகள் கிடைத்துள்ளன.

இலவசமாக கண் வில்லைகள் வழங்கும் திட்டத்தால் 03இலட்சம் பேர் கண் வில்லைகளை பொருத்தியுள்ளனர்.தற்போது அவயவங்களை பொருத்தும் சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் நுரையீரல் மாற்று சிகிச்சையை ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். இருதய மாற்று சிகிச்சைகள் இரண்டு மேற் கொள்ளப்பட்டுள்ளன.முழுமையான சுகாதார சேவையை பெற்றுக் கொடுத்து மக்களின், சுகாதார வசதிகளை மேம்படுத்துவதே எமது இலக்கு.

சுகாதார ஊழியர்களுக்கு பட்டங்களை வழங்குவதற்கான பீடங்களை அமைத்து சுகாதார துறையில் சிறந்த பணியாளர்களை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.  

இலங்கையின் சுகாதார சேவையை உலக நாடுகள் பாராட்டினாலும் இலங்கையில் மிக குறைவாகவே பாராட்டப்படுகின்றது என்றார்.

இந்நிகழ்வில் சுகாதார, போசணைகள் மற்றும் சுதேச  இராஜாங்க அமைச்சர் பைஸல் காசிம் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

இவ்வைபவத்தில் ஆய்வுகூட தொழில்நுட்ப விஞ்ஞானிகள் 13 பேர், வைத்திய ஆய்வுகூட தொழில்நுட்ப  விஞ்ஞானிகள் 116 பேர், பார்மசிஸ்ட் 176 பேர், கதிரியக்கவியலாளர்கள் 41  பேர், மின்னணு மறுபதிப்பு  பதிவாளர்கள் 09 பேர்,சுகாதார  ஆய்வுகூடப் பணியாளர்கள் 10 பேர், பற் சீரமைப்பாளர்கள் 03 பேர், சிறுவர்  குடும்ப சுகாதார அதிகாரிகள் 845 பேர், வைத்திய  உதவியாளர்கள் 53  பேர், வீடுகளுக்கான பொறுப்பாளர்கள் 131 பேர், உணவு பரிசோதகர்கள் 54 பேர்,  போக்லிப்ட் 07 பேர், பராமரிப்பாளர்கள் (பயிற்சிக்காக) 692 பேர் என 2,150  பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன.

Fri, 02/08/2019 - 08:23


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை