அடிமை சாசனத்துக்கான நகர்வை நிறுத்த ஒன்றிணைய வேண்டும்

தயாராகும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை அமுலாக்குவதன் ஊடாக ஜனநாயக குரல்களை நசுக்க எடுக்கும் நாசுக்கான நகர்வினை உடன் நிறுத்துவதற்கு அனைத்து தரப்புக்களும் பேதமின்றி ஒன்றிணைய வேண்டும் என்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார். 

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் உயர்நீதிமன்றத்தில் வியாக்கியானத்திற்காக பாராளுமன்றத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையிலும் அதுகுறித்து ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜா வெளியிட்டுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தொடர்பில் கவனம் செலுத்தி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனால் விடுக்கப்பட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

இந்த நாட்டில் தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைக்கான ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த காலத்தில் அது பயங்கரவாதமாக சித்தரிக்கப்பட்டது. ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு தற்போது பத்தாண்டுகளாகின்ற போதும் சத்தமின்றி யுத்தமொன்றை மேற்கொள்வதற்கான பயங்கரவாத தடைச்சட்டம் வலிந்து அமுலாக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக தொடர்ச்சியான எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டு வருகின்ற நிலையில் அந்தச் சட்டத்தினை மாற்றி சர்வதேச நியமனங்களுக்கு உட்பட்டு புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை கொண்டுவரவுள்ளதாக அரசாங்கம் அறிவித்தது. அத்துடன் சர்வதேச ரீதியில் பயங்கரவாதம் தலைதூக்கி வருவதால் அத்தகைய சட்டமொன்று அவசியம் என்றும் காரணம் கற்பித்தது. 

இச் சட்டம் உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்திற்கு பின்னர் மீண்டும் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு விரைந்து அமுலாக்குவதற்கு திரைமறைவில் அமைதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.  

ஜனாதிபதி சட்டத்தரணி, கே.வி.தவராஜாவின் கருத்துப்படி, எந்த பொலிஸ் அதிகாரிக்கும் அல்லது ஆயுதப்படை உறுப்பினருக்கும் அல்லது ஒரு கரையோரப் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கும் எந்தவொரு பிரஜையையும் சந்தேகத்தின் பேரில் பயங்கரவாதி என்று கருதமுடிவதோடு பிடியாணையின்றி எவரையும் கைது செய்வதற்கும் வெறும் சந்தேகத்தின் பேரில் அமைவிடங்கள் 'பயங்கரவாத' செயற்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன என்ற அடிப்படையில் அவ்விடத்திற்குள் பிரவேசிப்பதற்கும் தேடுதல் செய்வதற்கும், புதிய சட்டம் அனுமதி வழங்குகிறது. 

இந்த நாட்டில் உரிமைக்கான போராட்டத்தினை பயங்கரவாதமாகச் சித்தரித்து பயங்கரவாத தடைச்சட்டத்தினை அமுலாக்கி தற்போது வரையில் தமிழர்கள் மீது அச்சட்டத்தினை பாய்ச்சுவதற்கு இடமளித்துக்கொண்டிருக்கும் அரசாங்கம், எதிர்காலத்தில் அச்சட்டத்தினையும் விட வலிமையான சட்டமொன்றை புதிய பெயரில் அமுலாக்கி ஒட்டுமொத்த இனத்தின் மீதும் அடிமைச்சாசனம் எழுதுவதற்கே முயற்சி செய்கின்றது.

ஆகவே இத்தகைய பாரிய பின்விளைவுகளைக் கொண்ட சட்டத்தினை அமுலாக்குவதற்கு மேற்கொள்ளப்படும் நாசுக்கான நடவடிக்கைகளை உடன் தடுத்து நிறுவதற்கு அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் ஜனநாயகத்தின் பால் செயற்படும் அனைத்து தரப்பினரும் பேதமின்றி ஒன்றிணையுமாறு பகிரங்கமாக அழைப்பு விடுகின்றேன்.   

(கோவில்குளம் குறூப் நிருபர் )

Thu, 02/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை