இறக்குமதியாகும் பால்மாவில் எவ்வித கலப்படமும் இல்லை

ஆய்வு செய்த நிறுவனங்கள்அறிவிப்பு

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் எந்த வித பொருளும் கலக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க அறிவித்துள்ளார்.  

இறக்குமதி செய்யப்படும் பால்மா பாதுகாப்பானதும் கலப்படமற்றதுமாகும் என இது தொடர்பில் ஆய்வு செய்த நிறுவனங்கள் அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சகல விதமான பால்மா வகைகளும் கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம் அடங்கலான ஐந்து இடங்களில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டே அனுமதி வழங்குவதாகவும் இதன்படி இறக்குமதி  செய்யப்படும் பால்மாவில் வேறு வகையான கொழுப்பு மற்றும் எண்ணெய் கலப்படம் செய்யப்படாத பால்மா என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.  

இறக்குமதி செய்யப்டும் பால்மாவில் பன்றிக் கொழுப்பு மற்றும் பொருட்கள் கலக்கப்படுவதாக கடந்த வாரம் பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.  

இது தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ள அவர் மேலும் கூறியதாவது,  

1980ஆம் ஆண்டின் 26ஆம் இலக்க உணவுச் சட்டத்தின் பிரகாரம்இறக்குமதி செய்யப்படும் உணவு சம்பந்தமாக நடவடிக்கைகளுக்கான உணவு அதிகாரியாக சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நியமிக்கப்பட்டுள்ளார். இறக்குமதி செய்யப்படும் உணவுகளின் தரம், குணம் மற்றும் பாதுகாப்பு சம்பந்தமாக பரிசீலனை செய்து அவை சர்வதேச தரத்திற்கு அமைவாக உள்ளனவா என உறுதிப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சின் இறக்குமதி உணவு பரிசோதனைப் பிரிவின் உணவு மற்றும் மருந்து பரிசோதகர்கள், கால்நடை உற்பத்தி, சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள், கமநல திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் தர நிர்ணய உத்தியோகத்தர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.  

பால்மா கப்பலில் கொண்டுவரும் போது அதற்கான பகுப்பாய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவ்வறிக்கை சர்வதேசத்தினால் அங்கீகரிக்கப்பட்ட முறைப்படி பகுப்பாய்வு செய்யும் ஆய்வு கூடத்தினால் வழங்கப்பட்டுள்ளது என பால்மா ஏற்றுமதி செய்யும் நாடு உறுதியளிக்க வேண்டும். பால்மாவுடன் வேறு ஏதேனும் கொழுப்பு அல்லது எண்ணெய் கலக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய பகுப்பாய்வு அறிக்கை என்பன மிக முக்கியமானது. இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பால்வகைகளும் மனித பயன்பாட்டிற்கு உகந்தது என்ற சுகாதாரச் சான்றிதழ் ஏற்றுமதி செய்யும் நாட்டின் அரசாங்கத்தின் உணவு அதிகாரியால் வழங்கப்பட வேண்டும். சுகாதார அமைச்சின் கீழுள்ள உணவு மற்றும் மருந்து பரிசோதகர்களுக்கு பால்மா இறக்குமதி சம்பந்தமான சகல ஆவணங்களும் சுங்க அதிகாரிகளினால் சமர்ப்பிக்கப்படும். பால்மா மாதிரிகள் கதிர்வீச்சு சோதனைக்காக அணுசக்தி அதிகார சபைக்கு அனுப்பப்பட்டு உறுதிப்படுத்தப்படும். மற்றொரு பால்மா மாதிரி கொழுப்பு பகுப்பாய்வுக்கும் நுண்ணங்கி பகுப்பாய்வுக்கும் சுகாதார அமைச்சின் உணவு ஆய்விற்கு அனுப்பி உறுதிப்படுத்தப்படுகின்றது. அத்துடன், கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு உறுதி செய்யப்படுகின்றது.  

பால்மாவில் கொழுப்பு அல்லது எண்ணெய் வகைகள் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என அறிய பால்மா மாதிரிகள் சுகாதார அமைச்சின் உணவு ஆய்வகத்தினால் பகுப்பாய்வு செய்யப்பட்டும் பரீட்சிக்கப்படும். இந்த வருடமும் இவ்வாறு 5 பால்மா மாதிரிகள் பெறப்பட்டு இதற்கான ஆய்வு அறிக்கையும் பெற்றுக் கொள்ளப்படுகிறது. இலங்கை கட்டளைகள் நிறுவனம் மற்றும் கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவன ஆய்வுகளின்பிரகாரம் பால்மாவில் வேறு எந்த கலப்படமும் செய்யப்படவில்லை என உறுதியளிக்கப்பட்டுள்ளது.  

Fri, 02/15/2019 - 11:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை