சகல இயந்திரவாள்களையும் பதிவு செய்வது கட்டாயம்

இம்மாதம் 28வரை அரசு கால அவகாசம்

நாட்டில் பாவனையிலுள்ள சகல இயந்திர வாள்களையும் பதிவு செய்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சரான, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவிற்கமைய பாதுகாப்பு அமைச்சு மேற்படி தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இதற்கமைய பதிவு நடவடிக்கைகள் இம்மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு பெப்ரவரி 28ஆம் திகதியுடன் நிறைவுபெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள விஷேட அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :-

காடுகள் அழிக்கப்படுவதனை கட்டுப்படுத்தல், இயந்திர வாள்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் வியாபாரத்தை நிறுத்துதல் மற்றும் மரங்கள் வெட்டப்படுவதனை மட்டுப்படுத்துதல் போன்றவைகளை நோக்கமாக கொண்டே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய அரச, அரச சார்பு, தனியார் துறை நிறுவனங்கள் அல்லது தனிப்பட்ட ரீதியில் பயன்படுத்தும் சகல இயந்திரவாள்களும் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டு அவற்றை பதிவுசெய்து அதற்கான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதற்கான பதிவு நடவடிக்கைகள் 2019பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு பெப்ரவரி 28ஆம் திகதியுடன் நிறைவுபெறவுள்ளது.

இவ்வாறு பதிவுசெய்யப்பட்டதை அடையாளம் காண்பதற்காக விஷேட அனுமதிபத்திரம் மற்றும் இலக்கத்தகடுகள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவுறுத்தல்கள் நாட்டில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் அனைவரினதும் ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுவதாகவும் பாதுகாப்புச் செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

(ஸாதிக் ஷிஹான்)

Fri, 02/15/2019 - 11:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை