யாழ். போதனா வைத்தியசாலையின் தூய சேவைகளுக்கு பெரும் அபகீர்த்தி

ஊடகங்கள் பொறுப்புடன் செயற்படல் அவசியம் என்கிறார் வைத்தியசாலை பணிப்பாளர்  

யாழ்ப்பாணம் குறூப், விசேட நிருபர்கள்

யாழ் போதனா வைத்தியசாலை தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்தி வைத்தியசாலையின் தூய சேவைகளுக்குப் பெரும் அபகீர்த்தியை ஏற்படுத்தியிருப்பதாக அதன் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி தெரிவித்தார்.  

யாழ்.போதனா வைத்தியசாலை தொடர்பில் வெளியான செய்திகளை மறுத்துள்ள பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவ்வாறான சம்பவங்களோ, இது குறித்த எவ்வித விசாரணைகளுமோ இடம் பெறவில்லை என்றும் தெரிவித்தார்.  

யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று (05) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இதுபற்றி அவர் தெரிவித்தார்.  

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்:  

யாழ்.போதனா வைத்தியசாலையில் 500இற்கும் மேற்பட்ட தாதியர்கள் கடமையாற்றுகின்றனர். இங்கு கடமையாற்றும் சகலரும் தங்களது கடமைகளைப் புனிதமாகவும் பொறுப்புடனும் செய்வதுடன் நோயாளர்களைப் பரிவுடனும் கவனிக்கின்றனர்.  

சிலர் வெளியிட்ட தவறான செய்தியால் வைத்தியசாலையின் சேவைக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளதுடன், ஊழியர்களும் மனஞ்சோர்வடைந்துள்ளனர். இவ்வாறு போலியான செய்திகள் வெளியானமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளோம். தாதியர்கள் தவறிழைத்திருப் பின் முறையாக முறைப்பாடுல் நிர்வாகம் முதலில் உள்ளக விசாரணைகளை நடத்தும். ஆனால், இவை எதுவும் இடம் பெறாத நிலையில் போலிச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.  

இந்தச் செய்தியின் பின்னணிகள் பற்றி உரிய முறையில் விசாரணை நடத்தப்படும்.    அண்மையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு சிகிச்சையளித்ததில் குறைபாடு நிலவியதாக நோயாளியின் உறவினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பில் விசாரணைகள் நடைபெறுகின்றன. இந்தச் சம்பவத்தையே சில இணையத்தளங்கள், ஊடகங்கள் திரிபுபடுத்தி செய்தி வெளியிட்டுள்ளன. சில இணைத்தளங்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் இவ்வைத்தியசாலையில் பணியாற்றும் தாதியர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். ஏற்கனவே தாதியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகின்றது. இவ்வாறான செய்தியால் தாதியர் சேவையில் இணைய பெண்கள் தயக்கம் தெரிவிக்கலாமென்றும் அவர் தெரிவித்தார்.

Wed, 02/06/2019 - 08:50


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை