பெற்றோரினூடாக பாடசாலைகளுக்கு பணம் சேர்ப்பதை தடுக்க விரைவில் சுற்றுநிருபம்

மாணவர்களிடம் பணம் சேர்ப்பதை தடுப்பதற்காக சுற்றுநிருபம் வெளியிட்டுள்ள நிலையில் பெற்றோர் பணம் திரட்டி பாடசாலை நடவடிக்கைகளுக்கு நிதி வழங்குவதற்கு அனுமதிக்க முடியாது.இது தொடர்பிலும் சுற்றுநிருபம் ஒன்றை வெளியிடுவதற்காக குழுவொன்றை நியமித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.  

கல்வி அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு முரணாக பணம் திரட்டும் அதிபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். வாய்மூல விடைக்காக ஹேசான் விதானகே எம்.பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அமைச்சர் மேலும் கூறியதாவது, 2015இல் வெளியிட்ட சுற்றுநிருபத்தினூடாக மாணவர்களிடம் பணம் சேர்ப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. 2017இல் இந்த சுற்றுநிருபம் திருத்தப்பட்டது. தேசிய பாடசாலையாயின் கல்வி அமைச்சினதும் மாகாண பாடசாலையாயின் மாகாண அமைச்சின் செயலாளரினதும் அனுதியை பெற வேண்டும்.  

இந்த நிலையில் முறைகேடாக பணம்திரட்டப்படுகிறது. பெற்றோர் பணம் சேர்த்து பாடசாலைகளுக்கு வழங்கும் நிலைமை தற்பொழுது காணப்படுகிறது.இதனையும் அனுமதிக்க முடியாது. அதிபர்களுக்கு தெரிந்தே இவ்வாறு பணம் சேர்க்கப்படுகிறது. பெற்றோர் சேர்க்கும் பணத்தை பாடசாலை நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த முடியாது. அதனால் சுற்றுநிருபத்தை மாற்ற இருக்கிறோம். இது தவிர 10 வருடங்களுக்கு மேலாக ஒரே பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கும் நடைமுறை தொடர்ந்து செயற்படுத்தப்படுகிறது. இந்த நடைமுறை தேசிய பாடசாலைகளில் முழுமையாக முன்னெடுக்கப்படுகிறது. மாகாண பாடசாலைகளில் இது முழுமையாக செயற்படுத்த எமக்கு தலையிட முடியாதுள்ளது என்றார்.  

Wed, 02/06/2019 - 09:13


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை