இந்திய விமானங்களை வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவிப்பு

கோளாறினால் வீழ்ந்தாக இந்தியா தெரிவிப்பு

எல்லை தாண்டி  பாகிஸ்தான் எல்லைக்குள் வந்த இந்திய விமானப் படையைச் சேர்ந்த விமானங்கள் இரண்டை சுட்டு வீழ்த்தியதாக, பாகிஸ்தான் விமானப்படை அறிவித்துள்ளது.

இது தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்டுள்ள, பாகிஸ்தான் இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் அசிப் கபூர், இந்திய விமானப்படைக்குச் சொந்தமான இரு விமானங்களை பாகிஸ்தான் வான் பரப்பில் வைத்து சுட்டு வீழ்த்தியதாகவும், விமானி ஒருவரையும் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இரு விமானங்களில் ஒன்று இந்திய கட்டுப்பாட்டுக்குள் உள்ள ஜம்மூ காஷ்மீர் புட்காம் பகுதியிலும், மற்றையது பாகிஸ்தான் பகுதியிலும் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்திய விமானப்படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர் ஒன்று, ஜம்மூ காஷ்மீர் புட்காம் பகுதியில் வீழ்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்று காலை 10:05 அளவில்  ரஷ்ய தயாரிப்பான MI-17 ரக போர் ஹெலிகொப்டர்களே இவ்வாறு அழிந்துள்ளன. அதில் ஒன்று இந்திய கட்டுப்பாட்டிலுள்ள புட்காம், காரெண்டு கலான் கிராமத்தில் விழ்ந்துள்ளது.

இச்சம்பவத்தில் இருவர் பலியாகியுள்ளதாகவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று (26) அதிகாலை இந்திய விமானப்படை, பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டுவந்ததாக தெரிவிக்கப்படும் தீவிரவாத இலக்குகள் மீது தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவித்திருந்தது.

இந்நிலையிலேயே குறித்த இந்திய விமானப்படை ஹெலிகொப்டர் வீழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Wed, 02/27/2019 - 13:41


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை