ரத்கம கொலை: பொலிஸாருக்கு விளக்கமறியல் நீடிப்பு

கடமைக்கு திரும்பாத 5 கான்ஸ்டபிள்களுக்கு வெளிநாடு செல்ல தடை

ரத்கம - ரத்ன உதாகமவில் வர்த்தகர்கள் இருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தென் மாகாண விஷேட விசாரணை பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் இருவரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இருவரையும் எதிர்வரும் மார்ச் மாதம் 13ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க காலி நீதவான் நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டுள்ளது.

ரத்கம -ரத்ன உதாகம பிரதேசத்தை சேர்ந்த 31வயதுடைய ரசேன் சிந்தக மற்றும் 33வயதுடைய மஞ்சுள அசேல ஆகியோர் கடந்த மாதம் 23ஆம் திகதி வேன் ஒன்றில் வந்த குழு ஒன்றினால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் தென் மாகாண விஷேட விசாரணை பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கபில நிசாந்த மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டவர்களாவர்.

வர்த்தகர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தென் மாகாண விசேட விசாரணைப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 15 பொலிஸ் அதிகாரிகளுக்கு அண்மையில் இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது.

இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்ட பின்னர் சேவைக்கு திரும்பாமல் இருக்கின்ற 5 கான்ஸ்டபிள்களுக்கு வெளிநாடு செல்வதற்கு காலி நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்நிலையில் கொணமுல்லையில் உள்ள வீடொன்றில் கொலை செய்யப்பட்டு மெதகன்கொட காட்டுப்பகுதியில் எரிக்கப்பட்டதாக கூறப்படும் அப்பகுதில் இன்று பல எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Wed, 02/27/2019 - 15:43


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை