இந்திய பிரதமர் நரேந்திர மோடி எனக்கு அண்ணன் மாதிரி

சவுதி முடிக்குரிய இளவரசர் சல்மான்

பிரதமர் மோடி எனக்கு அண்ணன் மாதிரி, நான் அவருக்கு தம்பி என்று சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், முதலாவது அரசு முறை பயணமாக பாகிஸ்தான், இந்தியா, மலேசியா, இந்தோனேசியா ஆகிய 4 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் அரசுமுறை பயணமாக இந்தியா வந்தடைந்தார். டெல்லி விமான நிலையம் வந்தடைந்த முகமது பின் சல்மானை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று வரவேற்றார்.

நேற்று (19) காலை ஜனாதிபதி மாளிகையில் சவுதி இளவரசருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரை ஜனாதிபதி மாளிகையில் சவுதி இளவரசர் சல்மான் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அப்போது முதலீடு, சுற்றுலா உள்ளிட்டவை தொடர்பான 5 முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தானது. அப்பொழுது புல்வாமா தாக்குதல் தொடர்பாக எடுத்துரைத்த பிரதமர், ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி இளவரசரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

பின்னர் சல்மான் தனது பேச்சில், இந்தியாவும் சவுதியும் வரலாறு முழுக்க நெருக்கமாக இருந்த நாடுகள். பல நாடுகள் உருவாகும் முன்பே நாம் நட்பு நாடுகள். இந்திய மக்கள் எங்களுக்கு எப்போதும் நண்பர்கள். சவுதியை உருவாக்குவதில் இந்தியா கடந்த 70 வருடமாக பாடுபட்டு இருக்கிறது. சவுதியும் இந்தியாவிற்காக நிறைய பணிகளை செய்து இருக்கிறது. இந்தியா சவுதி இடையிலான உறவு எப்போதும் போல தொடர வேண்டும். இரண்டு நாடுகளின் நன்மைக்காகவும், பலனுக்காகவும் இரண்டு நாடுகளும் எப்போதும் நட்புடன் இருக்க வேண்டும்.

பிரதமர் மோடி, மற்றும் என்னுடைய தலைமையின் கீழ் இந்தியா - சவுதி உறவு மேம்படும் என்று எதிர்பார்க்கிறோம். உலகின் மிக முக்கியமான நாடுகளாக இரண்டு நாடுகளும் வளரும். நாம் செய்யும் ஒப்பந்தங்கள் இரண்டு நாடுகளின் வளர்ச்சிக்கு உதவும். பிரதமர் மோடியின் பணிகளை நான் போற்றுகிறேன். அவர் எனக்கு அண்ணன் போன்றவர். நான் அவருக்கு தம்பி போன்றவர். எங்களின் நட்பு மிக மிக வலிமையானது என்று சல்மான் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

இளவரசரின் இந்திய வருகையால், இந்தியா-சவுதி இடையிலான உறவுகள் மேலும் வலுவடையும் வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளதாக இந்தியாவுக்கான சவுதி தூதர் சவுத் முகமது அல் சவுதி கூறினார். வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மை தொடர்பான எங்கள் பொதுவான நாட்டத்தின் அடிப்படையில் மிகவும் முக்கியமான கூட்டாளியாகவும், மதிப்பு மிக்க நண்பராகவுமே இந்தியாவை சவுதி அரேபியா பார்ப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். 

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் பாகிஸ்தான் சென்றார்.  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடனான சந்திப்பில் இரண்டு நாடுகளுக்கும் இடையே 20 மில்லியன் டொலர் மதிப்பிலான பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது. இந்திய பயணத்துக்குப் பிறகு முகம்மது பின் சல்மான், சீனாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

(இந்திய செய்தியாளர் - ஷாகுல் ஹமீட்)

Wed, 02/20/2019 - 15:15


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை