அரசின் அபிவிருத்திகளுக்கு 2000மில்லியன் டொலர்

பிணைமுறியை பெறும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை துரிதமாக முன்னெடுக்க இரண்டாயிரம் மில்லியன் டொலர் சர்வதேச பிணைமுறியைப் பெற்றுக்கொள்ளும் நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் யோசனையை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது  

தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்களுடன் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களும் துரிதமாக முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்குத் தேவைப்படும் நிதியை பெற்றுக்கொள்ள, நிதியமைச்சர் மங்கள சமரவீர அமைச்சரவைக்கு யோசனை சமர்ப்பித்திருந்தார். இந்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

அரசின் அபிவிருத்திகளை முன்னெடுக்க இரண்டாயிரம் மில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படுமென மதிப்பிடப்பட்டுள்ளது. இதை சர்வதேசப் பிணைமுறிகள் மூலம் பெற்றுக்கொள்ளும் யோசனையையே அமைச்சர் சமர்ப்பித்திருந்தார்.  

அரசாங்கம் நாடு முழுவதிலும் வீதி அபிவிருத்தி, குடிநீர், சுகாதாரம், கல்வி, வீடமைப்பு உட்பட உட்கட்டமைப்பு வசதிகளை துரிதப்படுத்தி மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூரணப்படுத்தவுள்ளது.  

இத்திட்டங்கள் விரைவில் முன்னெடுக்கப்படுமென நிதியமச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.  

இந்த இரண்டாயிரம் மில்லியன் டொலர் நிதியை பெற்றுக்கொள்ளும் பொருட்டு எச்.எஸ்.பீ.சீ. நிறுவனம் உட்பட 7நிதி நிறுவனங்களின்  பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.  

இலங்கை அரசாங்கம் சார்பாக இலங்கை மத்திய வங்கி இந்த சர்வதேசப் பிணைமுறியை கையாளவிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.  

இதேவேளை, இலங்கை பெற்றுக்கொண்ட சர்வதேசக் கடன் தவணை மற்றும் வட்டியாக இந்த வருடத்தில் 5900மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டியுள்ளது. இத்தொகையானது வருடத்தில் திருப்பிச் செலுத்தும் மிகப்பெரிய கடன் தொகையாகும்.  

இவ்வளவு பெரிய கடன் சுமைக்கு மத்தியில் அரசு பெரும் சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றது. இந்தச் சவாலை அரசு வெற்றி கொள்ளும் எனவும் அதற்குத் தூர நோக்குடனான திட்டம் வகுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.    

Wed, 02/20/2019 - 15:03


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை