ஈரானில் தற்கொலை தாக்குதல்: 27 புரட்சி காவல் படையினர் பலி

தென்கிழக்கு ஈரானில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் ஒன்றில் புரட்சிக் காவல் படையின் குறைந்தது 27 உறுப்பினர்கள் பலியாகியுள்ளனர்.

பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய சிஸ்தான் பலுகிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்பு படையினரை ஏற்றிச்சென்ற பஸ் வண்டி ஒன்றே இந்த தாக்குதலில் இலக்காகியுள்ளது.

கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்ற இந்த தாக்குதலுக்கு சுன்னி முஸ்லிம் போராட்டக் குழுவான ஜெயிஷ் அல் அதில் (நீதிக்கான இராணுவம்) பொறுப்பேற்றுள்ளது.

1979 இஸ்லாமிய புரட்சிக்கு பின்னர் உருவாக்கப்பட்ட புரட்சிக் காவல் படை ஈரானின் இராணுவ, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் அதிக செல்வாக்கு செலுத்தி வருகிறது.

பாகிஸ்தானுடனான எல்லை பகுதியில் இருந்து கடந்த புதன்கிழமை திரும்பிக் கொண்டிருந்த படையினர் மீது காஷ் சஹதான் விதியில் வெடிபொருள் நிரப்பப்பட்ட கார் வண்டி ஒன்று வெடிக்கச் செய்யப்பட்டது என்று புரட்சிக் காவல் படையின் தென் கிழக்கு கிளை குறிப்பிட்டுள்ளது.

“தக்பீர் தீவிரவாதிகள் மற்றும் மேலாதிக்க சக்திகளின் உளவுச் சேவை கூலிப்படைகள்” மீது ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. ஏனைய முஸ்லிம்களை விசுவாசிகளல்லாதோராக பார்க்கும் சுன்னி கடும்போக்காளர்களே ‘தக்பீர்’ என்று அழைக்கப்படுகின்றனர்.

தாக்குதல் இடம்பெற்ற மாகாணம் அபின் போதைப்பொருள் கடத்தல் இடம்பெறும் பிரதான பாதையாக இருப்பதோடு இங்கு போதைக் கடத்தல்காரர்கள் மற்றும் பலுச் பிரிவினைவாதிகளுடன் ஈரானிய இராணுவம் அடிக்கடி சண்டையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஈரானின் பொரும்பான்மை ஷியா முஸ்லிம்களிடம் இருந்து பாகுபாட்டுக்கு முகம்கொடுப்பதாகக் கூறி சுன்னி முஸ்லிம்களை பாதுகாப்பதற்காக ஜெய்ஷ் அல் அதில் 2012 ஆம் ஆண்டு தொடக்கம் போராடி வருகிறது.

Fri, 02/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை