சில கூடாரங்களாக மாறியுள்ள ஐ.எஸ்ஸின் கடைசி கோட்டை

சிரியாவில் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதி கிராமமொன்றின் ஒரு சில டஜன் கூடாரங்களுக்கு சுருங்கியுள்ளது.

டெயிர் அஸ்ஸோர் மாகாணத்தின் பங்கூஸ் கிராமத்தில் பழத்தோட்டம் ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களுக்கு இடையே எஞ்சிய ஐ.எஸ் போராளிகள் நிலைகொண்டுள்ளனர். கடந்த ஒரு சில தினங்களில் பல டஜன் ஐ.எஸ் உறுப்பினர்கள் அமெரிக்க ஆதரவு படையிடம் சரணடைந்த நிலையில் மேலும் சில போராளிகள் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றனர்.

ஐ.எஸ் கட்டுப்பாட்டுப் பகுதியில் தொடர்ந்து சுமார் 1,600 பெண்கள் மற்றும் குழந்தைகள் இருப்பதாக அந்தக் குழுவுக்கு எதிராக இறுதிக் கட்ட யுத்தத்தை முன்னெடுத்திருக்குத் குர்திஷ் தலைமையிலான சிரிய ஜனநாயகப் படை குறிப்பிட்டுள்ளது. அங்கு இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் ஐ.எஸ் குழுவின் குடும்ப உறுப்பினர்கள் என்று நம்பப்படுகிறது.

ஐ.எஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் சுமார் 54 கூடாரங்களில் பொதுமக்கள் இருந்து வருகின்றனர். சிறிய கூடாரங்களில் அபாயா அணிந்த பெண்கள் நடமாடுவது மற்றும் வாகனங்கள் சுற்றித் திரியும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

கடந்த புதன்கிழமை மோதல் நிறுத்தப்பட்டு சரணடைவதற்கு காலக்கெடு விதிக்கப்பட்டபோதும் அந்தக் காலம் கடந்திருக்கும் நிலையில் மீண்டும் தாக்குதல் விரைவில் ஆரம்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

“ஐ.எஸ் குழுவை முற்றாக அழிப்பதற்கான நடவடிக்கை வரவுள்ளது” என்று பங்கூஸ் கிராம தாக்குதலுக்கு பொறுப்பான சிரிய ஜனநாயகப் படையின் கட்டளை தளபதி அத்னன் அப்ரின் குறிப்பிட்டார்.

“இரண்டு நாட்களுக்கு முன் நாம் இரண்டு கிலோமீற்றர்களை கைப்பற்றினோம், நேற்று நாம் ஒரு சதுர கிலோமீற்றரை மீட்டோம், இன்று அதனை விடவும் குறைவான பகுதியை கைப்பற்றினோம். இப்போது நாம் சில நூறு சதுர மீற்றர் பகுதி பற்றியே பேசிக்கொண்டிருக்கிறோம்” என்று அவர் கூறினார்.

Fri, 02/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை